April 19, 2008

ஒசாமாவை பிடிப்பது எப்படி? பாகம்-2

தற்கால தமிழ் படைப்பாளிகள் சிலர் தரும் யோசனைகள்

எஸ்.ராமகிருஷ்ணன்: "வெயில் ஒரு குடுகுடுப்பைக்காரனைப் போல என் வாசலில் நின்றபடி கதறிக் கொண்டிருந்தது. காலிங் பெல் சப்தமிடுவதைப் போல எங்கோ ஒரு காளை மாடு முனகிக் கொண்டிருந்தது. அந்த பகல் பொழுது, குப்புறப் படுத்திருந்த கரடியைப் போல நெளிந்து கொண்டிருந்தது". இந்த மாதிரி 400 பக்க "போல" வசனம் இருக்கு. அத்தனையையும் பிரிண்ட் பண்ணி பின்லேடனின் டாய்லெட் சுவர் முழுக்க ஒட்டுங்க. மறுநாளே சரண்டர் ஆகிறாரா, இல்லையான்னு பாருங்க.

சாரு நிவேதிதா: யாதுரா அந்த பின்லேதன்? அழகா இருப்பாளா? மெயில் ஐடி குடு. நாளைக்கு சாட்ல பிடித்திறேன். எனக்கு சைக்கிள் விதத் தெர்யாது. ஒனக்கு எமினெம் தெர்யுமா? டெசர்ட் ரோஸ் கேட்ருக்கியா? என்னது, இப்பதிக்கு ரோஸ் தான் த்ரியுமா. செப் மாமி. மெட்டாலிக் வாய்ஸ். ஓ.....மோன மோன மோன மோன......ர்ரீ..ர்ரீ.........ர்ர்ர்ர்ர்ர்ரீ.

ஜெயமோகன்: அடப் போங்கப்பா, ஷகீலா படம் பாக்க திருவனந்தபுரம் போறவனை நிப்பாட்டி, இப்படி டார்ச்சர் பண்றீங்களே. வேணும்னா, ஒசாமாவுக்கு ஷகீலா படம் போட்டுக் காட்டுங்க, 'அஹம் பிரம்மாஸ்மி' ன்னு கதறிக்கிட்டு ஓடி வந்து சரண்டர் ஆயிடுவான். "தொப்பி, திலகம்" பதிவுக்கு அப்புறம் "கூலிங் கிளாஸ், குங்குமப் பொட்டு" போட்டிருக்கேன் என் வலைப் பக்கத்தில. அது போக "தேயிலைத் தோட்டமும், மார்க்சிய காமமும்" னு 6000 பக்கத்துல புதுசா ஒரு நாவல் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

கோணங்கி: முழு மூடன் காமாஸ்டோவாவைப் பறக்கடித்து சிதறும் அண்டரண்டாப் பட்சியின் சிற்ப நாவடுக்குகளின் ஏழாம் ஏட்டின் குருதி ஒழுகும் ரத்தின ஓலை மடக்குகளில் ஆறாயிர தேவர்களும், கோடானு கோடி அசுரர்களும் ஊதிப் பெருக்கிய குழலொலியின் மொக்குகளின் நினைவடுக்கில் விரியத் துவங்கி இருந்தது காபூல் நகரம். ஹலோ...எங்க ஓடுறீங்க? அட, நில்லுங்கப்பா............


ஒசாமாவை பிடிப்பது எப்படி?

”முத்தமிழ்” கூகுள் குழும உறுப்பினர்கள் சிலர் தரும் ஐடியாக்கள்

சாந்தி: ஹஹ......பின்லேடன் பாளையங்கோட்டைக்காரர் இல்ல. அதனால் நீங்க என்ன பேசினாலும் நான் கண்டுக்க மாட்டேன். குற்றாலம் மெயின் பால்ஸ் என் தங்கச்சி மாதிரி. செண்பகாதேவி அருவி தடாகத்தில தான் நான் நீச்சல் பழகினேன். ஹஹ..........

மஞ்சூரார்: பின்லேடன் மதியானம் 'சாட்'டுக்கு வந்தார். நலமா? ன்னு கேட்டேன். மாயமா மறைஞ்சிட்டார். ஆயிரம் நிலவே வா.....ஓராயிரம் நிலவே வா.....இதழோரம்.................

பட்டாசு: அளவே இல்லாம ஒரு நாளைக்கு 10 தடவ அவர் கிட்ட 'நலமா?' ன்னு கேட்டா, பாவம் அவரும் எவ்வளவு காலம் தான் பொறுப்பாரு. சேப்டி பின் நவீனத்துவ பார்வையில் பின்லேடனின் ஆளுமைக் கூறுகளின் படிமவியல்கள் மீள்பார்வை நோக்கி நிற்கின்றன.

விஜி: ஸ்ரீ ராம ஜெயம். பின்லேடனைத் துரத்த இளைஞனே திரண்டு வா. அடித்து நொறுக்கு, துவம்சம் செய். அறிவுச் சுடராகு.மதி நுட்பம் பெருக்கு. ஆஞ்சநேயன் துணை.

சங்கர்: எ.பி, த,பி இல்லாம செஞ்ச பாறைக் குடைவுகளுக்குள் பின்லேடன் பதுங்கி இருக்கான்னு காஞ்சி காமாட்சி கனவில் சொன்னாள். ஆப்கனின் இலை, பூ, மேகம் எல்லாம் அவனின் ரகசிய காதலிகள். ஆமா, ஒரு முக்கியமான விசயம். நான் சொல்,கருத்து திருத்தம் பண்றேனேன்னு யாரும் கவிதை எழுதுறத நிப்பாட்டிராதீங்க.

கென்: ங்கொக்கா...மக்க.............இங்க யாருக்குமே வாசிப்பனுபவம் இல்ல. நமக்கு அல்ஜீப்ரா தெரிஞ்சு என்ன புண்ணியம்? இன்னும் ப்ளாட்பாரத்தில மனிதக் கூட்டம் படுத்திருக்கு. குறிப்பிட்ட 'அந்த' வார்த்தை இல்லாம யாருமே கவித எழுதக் கூடாது. இதெல்லாம் நடந்தால் பின்லேடன் அகப்படக்கூடும். எல்லாரும் சத்தியத்த கடைப் பிடிக்கனும். பிடிக்காட்டி பிடிக்காதீங்க. 'சாத்தியமற்ற சாத்தியங்களின் மூலை நெருக்கல்கள்' அப்படின்னு ஒரு தொகுப்பு போடப் போறேன் 2030 ல.

April 03, 2008

புனைவுக் கதை


நான் அப்போது பூனையாக இருந்தேன். மதில்களின் மேலேறித் தாவித் திரிந்தேன். மியாவ் மியாவ் என்று சப்தித்தபடி ஊரை வலம் வந்தேன். பால் பாத்திரங்களை உருட்டுவதே என் விருப்பப் பொழுதுபோக்காக இருந்தது.


கொஞ்ச நாட்களில் வீடு மட்டுமே என் உலகமானது. வீட்டுக்குள் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தேன். உலகம் சுருங்கி என் சன்னலுக்குள் ஒளிந்து கொண்ட அந்த ஒரு நாளில் என் தூக்கத்தில் ஒரு விபரீதம் நடந்து முடிந்திருந்தது. என் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. குருதி ஒழுகிய வேதனையை விட, 'வாலில்லா பூனை' என்று பலர் பேசிய கேலி அதிகமாய் வருத்த, எங்கிருந்தோ விளைந்த விபரித கற்பனையில் என் பெயரை 'புனை' என்று மாற்ற முடிவு செய்தேன்.


அப்போது அவ்வழியாக வந்த பெரிய சிவந்த கண்களைக் கொண்ட 'வு' என்று அழைக்கப்பட்ட நரியனின் மேல் எனக்கு காதல் பிறந்தது. 'வு' அன்பானவனாகத் தெரிந்தான். அவனுடைய பைக்கில் என்னை அமர்த்தி ஊர் சுற்றிக் காட்டினான். திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றான். பாப்கார்ன் வாங்கித் தந்தான்.

ஒரு மாலை நேரத்தில் மழையின் முடிவில் இலைகளிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய மிருதுவான கைகளால் என் முதுகை வருடியபடி இருந்தான். நான் கண்களை மூடிய கிறக்கத்தில் இருந்தேன். "திருமணம் முடிந்ததும் உன் பெயருக்குப் பின்னால் என் பெயரையும் இணைத்து 'புனைவு' என்று எழுதுவாயா?" என்று கேட்டான். கிறக்கம் மறைந்து முதுகு கனக்க ஆரம்பித்தது. வு தான் என் வாலை வெட்டியவனோ என்று முதல் முறையாக சந்தேகம் பிறந்தது. தரையைப் பார்த்தபடி,"ம்.....எழுதுவேன்" என்றேன். என் கன்னத்தில் கை வைத்து என் தலையை உயர்த்தினான். என் மனதில் முணுமுணுத்த வார்த்தைகளை, என் கண்களின் வழியாக அவன் படித்திருந்திருக்கக் கூடும். அப்படி என்ன முணுமுணுத்தேன். "நரியனே, உன்னில் மட்டும் பிணைக்க அல்ல இந்த வாழ்வு, உலகத்தோடு".
என் கண்களைக் காணத் திராணி இல்லாமல் நரியன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அன்றிரவு துண்டிக்கப்பட்ட இடத்தில் என் வால் முளைக்க ஆரம்பித்திருந்தது. மறுநாள் 'மியாவ், மியாவ்' என்று சப்தித்தபடி உலகை வலம் வர ஆரம்பித்தேன்

March 31, 2008

கவனம்

வெண்மேகமாய் பளிச்சிட்டும்
கீறல்களாய் சிதறி மறையும்
மின்னல் உக்கிரம்

பயத்திலோ, அசுவாரசியத்திலோ
கவனிக்கத் தவிர்த்த கணங்கள்
பூசிய வெறுமைச் சாயத்தின் நெடியில்
மிதந்தபடி இருக்கின்றன
எழுதப்படாத டைரிப் பக்கங்கள்

March 18, 2008

ஹைக்கூ

என் தனிமைகளை
வெறிக்கும்
ஜன்னல்

March 15, 2008

செவிக்கு உணவு - சிறுகதை

செவிக்கு உணவான, இந்த மின் - நவீன உலகின் இணைய அரட்டை சிறுகதையாக வடிவம் பெறுகிறது

- ஹாய்
- சொல்லுடி, எப்படி இருக்க?
- ஒல்லியா இருக்கேன்
- ஆரம்பிச்சிட்டியா
- நீ எப்படி இருக்க?
- ம்ம்ம்ம்ம்....கொஞ்சம் குண்டா தான்
- ஹிஹிஹி
- அப்புறம், இன்னைக்கு பொழுது எப்படி போச்சு?
- வழக்கம் போல தான். சுத்த போர். இன்னைக்கு வேலமெனக்கிட்டு ஒரு சர்வே எடுத்தேன்
- அப்படியா, என்ன சர்வே
- டிரான்ஸ்பரன்சி சர்வே. 80% பெண்கள் பிரா தெரியும்படியாக ஸீ-த்ரூ ப்ளவுஸ் அணிகிறார்கள்
- ரொம்ப அவசியம்
- சர்வேயின் அடுத்த முடிவு என்ன தெரியுமா?
- தெரியல. சொல்லாமலும் விட மாட்ட. சொல்லித் தொலை.
- மீதி 20% பேரும் ஸீ-த்ரூ ப்ளவுஸ் தான் அணிகிறார்கள். ஆனால் பிரா அணிவதில்லை.
- அடக் கருமம் பிடிச்சவளே. பெண்களைப் பற்றி இப்படி ஒரு கேவலமான சர்வே எடுத்த முதல் பெண் நீயாத் தாண்டி இருப்ப.
- சரி, அதை விடு. நீ பாக்க எப்படி இருப்ப?
- கடைசியா என் கிட்டயே உன் சேட்டையக் காட்டப் பாக்கிறியா? எனக்கு உன் அம்மா வயசு. ஞாபகத்தில் வச்சிக்கோ.
- அப்படியா, சரி கேக்கல.
- கோவிச்சிக்கிட்டியா. சும்மா சொன்னேன். ஆண்களுடன் சாட்டும் போது என் அங்கங்கள் பற்றியெல்லாம் பேசத்தான் செய்கிறேன். ஆனால் உன்னுடன் அப்படி பேச தோணல.
- சரி விடுங்க.
- எதுக்கு ‘ங்க’
- நீ தான் அம்மா வயசுன்னு சொன்ன
- சும்மா சொன்னேண்டி. வா, போ ன்னே கூப்பிடு. அது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.
- சரி
- ஓர்குட்டில் கூட ஏகப்பட்ட லெஸ்போ புரொஃபைல்களைப் பார்க்க முடியுது
- ம்ம்ம்......அதில் பாதிக்கும் மேல் ஆண்கள் உருவாக்கிய போலி புரொஃபைல்கள்.
- ம்ம்ம்....இருக்கும். உனக்கு காதலன் யாரும் இருக்கிறார்களா?
- இல்லை. ஒரே ஒரு காதலி இருக்கிறாள்.
- ஐயையோ.................. உன் கணவனாக ஒரு ஆண் தான் வரமுடியும். ஞாபகத்தில வச்சிக்கோ.
- ஹா ஹா ஹா... அப்படி ஒரு ஞாபகத்தை ரொம்ப காலத்துக்கு முன்னமே தூக்கி எறிந்து விட்டேன்
- என்ன சொல்ற நீ?
- பெண்களுடன் மட்டுமே உறவு என்கிற என் நிலைப்பாட்டைத் தீர்மானமாக்கி விட்டேன்.
- லூசு மாதிரி பேசாத. ஹோமோசெக்சுவாலிட்டி தப்பில்லை தான். அதுக்காக பெண்ணுடன் தான் வாழ்வேன்னு நீ சொல்றது நல்லா இல்ல. இயற்கைக்கு மாறான உறவு தவறானது.
- நானும் இயற்கையிலிருந்து வந்தவள் தான் கண்மணி.
- அப்ப, உன் நிலைப்பாடு சரின்னு நான் ஒத்துக்கிடனுமா?
- அவசியமே இல்லை. ஆனால் ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாதிருந்த அர்த்தநாரீசுவர ஹெர்மாபுரோடைட்டுகளில் இருந்து கிளைத்து வளர்ந்தவர்கள் தாம் ஆண்களும், பெண்களும்.
- என்ன சொல்ற? கொஞ்சம் புரியும்படியா சொல்லு
- ஆரம்பத்தில் எல்லாமே ஆணும், பெண்ணுமான கலவையாகவே இருந்தன. பரிணாம வளர்ச்சியில் பால் பிளவுண்டது. ஆனால் அது முற்றான பிளவாகப் பிரியவில்லை என்பதே உண்மை. ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்.
- அதனால்???
- அதனால் சுய பால் விழைவும், எதிர் பால் விழைவும், இருபால் விழைவும் சாத்தியமாகிறது. இதில் எந்த இயற்கை மாறாட்டமும் இல்லை.
- ஒரே குழப்பமா இருக்கு. நீ சொல்வது சரியா, தப்பான்னு புரியல. ஆனா, இந்த சமுதாயம் என்ன சொல்லும்? உன்னைக் கேவலமாகப் பார்க்காதா?
- அது பற்றிய பெரிய கவலை எதுவும் இல்லை. நானும் ஒரு சமுதாயப் பிரஜை தான். என் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்கிற எண்ணமும் எனக்கு இருக்கிறது.
- ஆண்களைப் பார்த்தால் உனக்கு நிஜமாகவே எதுவும் தோணாதா?
- ஊகூம். எதுவும் தோணாது. ஆரம்பத்தில் என்னுடைய இந்த நிலைப்பாடு குறித்த குற்றவுணர்வுகளில் தவித்தேன். இப்போது அந்த நிலையைத் தாண்டிவிட்டேன்.
- ஆனால் உன்னைப் போன்றவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு தானே
- உண்மை தான். சுயபால் விரும்பிகள் பலரும் சமுதாய விதிமுறைகளுக்காக செயற்கையாகத் தங்களின் உணர்வுகளை மழுங்கடிக்கிறார்கள். ரொம்ப சிலரே என்னைப் போல பிடிவாதமாய் இருக்கிறோம்.சரி அதை விடு, உன் ஆன் லைன் காதல்கள் பற்றி சொல்லு.
- என்ன சொல்ல, என் மெசெஞ்சரில் எப்பவும் குறைந்தது 10 ஆண்கள் இருப்பார்கள். அடிக்கடி அவர்களை நீக்குவதையும், புதிதாய் வேறு நபர்களைச் சேர்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
- எதற்காக நீக்குகிறாய்?
- எல்லாருக்கும் ‘அது’ தான் வேணுமாம்
- ‘அது’ ன்னா?
- என் வாயிலிருந்து அந்த வார்த்தையைப் புடுங்குவதில் உனக்கு என்ன சந்தோஷம். சரி சொல்லுறேன். செக்ஸ்.
- கேட்டா கொடுக்க வேண்டியது தானே
- அய்யோடா, எனக்கு பேச்சே போதும் தாயே.
- உனக்கு பயம்
- அதுவும் உண்மை தான். ஆனால் உடலைப் பகிர்வதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடும் இல்லை. இந்த விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
- ஆம். உறவு கொள்வதில் பெரிய சிக்கல்கள் இல்லை தான். ஆனால் சேர்ந்து வாழவேண்டும் என்கிற எண்ணம் பரிகாசத்திற்கு உள்ளாகிறது.
- ம்ம்ம்ம்.....
- உன் கணவர் என்ன செய்கிறார்?
- ஆடிட்டர்
- அன்போடு கவனித்துக் கொள்வாரா?
- தெரியவில்லை. எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். ஆனால் உடலை மட்டுமே அவருக்கு தர முடிகிறது. மனதை அல்ல. மனதளவில் அவரை ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டேன்.
- சும்மா கதை விடாதே. திருமண வாழ்க்கை சந்திக்கும் சலிப்பை வேறு மாதிரியாகச் சொல்கிறாய்.
- அப்படி இல்லை. திருமண வாழ்வுத் துவக்கமே எனக்கு பெரிய அதிர்ச்சியாகத் தான் ஆரம்பித்தது. அடக்கி ஆள முயன்ற மாமியார், சாவித்துவாரம் வழியாக நான் குளிப்பதை வேடிக்கை பார்த்த மாமனார். பெரிய கேவலம்.
- உன் கணவரிடம் முறையிட்டு இருக்க வேண்டியது தானே
- முறையீடா?. தூங்கும் மனைவியைப் புணரும் கணவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
- ம்ம்ம்....... பிணங்களைப் புணருபவர்களே இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து புணருவதற்கென்றே ஒரு பரம்பரையே இருந்ததாம். அர்த்தசாஸ்திரத்தில் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதாம். தமிழ் சமுதாயத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.
- அந்த மாதிரியான ஒரு கணத்தில் பிறக்கும் எரிச்சல் இருக்கிறதே. அதை எப்படிச் சொல்றதுன்னு புரியல.
- அதிகார வெளியில் அடக்கப்பட்ட உடலின்பம் தன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில் முறைகேடாகப் பிரயோகிக்கப்படுகிறது. சரி, விடு விடு.
- அப்புறம் தனிக்குடித்தனம். குழந்தைகளும் இப்போது வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். நிறைய தனிமை கிடைக்கிறது.
- ம்ம்ம்.......
- சில நேரம் எரிச்சலாக இருக்கும். நான் அனுபவித்த பழைய கொடுமைகளுக்கெல்லாம் எதிர்வினையாகத் தான் இப்படி அசிங்கமாக செக்ஸ் சாட் செய்து கொண்டிருக்கிறேனோ என்று.
- அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு பிடித்த விசயத்தை நீ செய்கிறாய். அவ்வளவு தான். உன் தனிமையை மறக்கடிக்கும் பொழுதுபோக்கு என்று நினைத்துக் கொள்.
- ம்ம்ம்....ஆனால் நிலையான ஒரு நட்பைப் பெற முடிவதில்லை. முன்னமே சொன்ன மாதிரி அடிக்கடி ஆட்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
- உண்மை தான். அந்தரங்கம் தீவிரமாய் அலசப்படுவதனால் செக்ஸ் சாட் சீக்கிரத்திலேயே வெறுத்து விடுகிறது போல. தவிரவும் எந்த இறுக்கமான உறவுத் தொடர்ச்சியும் இங்கே அவசியமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
- ம்ம்ம்.......
- சாருநிவேதிதாவின் ராஸலீலா நாவலில் விதவிதமான செக்ஸ் சாட்டுகளின் சுவாரஸ்யமான வர்ணனைகள் இருக்கிறது. ஆனால் எல்லாமும் ஒரு கணத்தில் படிப்படியாகக் குறைந்து நின்று போகிறது.
- ஓ...அப்படியா. இதை விட்டு விட வேண்டும் என்று சொல்கிறாரா?
- அப்படி இல்லை. எதிர்காலம் பற்றி குழப்பிக் கொள்ளாமல் அந்த கணத்தின் இன்பத்தை அந்நேரத்தில் அனுபவிப்பது என்று கூட கொள்ளலாம்.
- என்னவோ போ. ஒன்னுமே புரியல.
- செக்ஸைப் போலவே செக்ஸ் சாட்டும் அதன் உச்சத்தை அடைந்து பின் அமைதிக்கு திரும்புகிறது போல.

BUZZ

எங்க போன?

- ஒரு ஆண் நண்பன் சாட்டுக்கு வந்திருக்கான். அவனுடன் கொஞ்சம் அளவளாவிக்கிட்டு இருந்தேன்
- சரி, கண்டினியூ பண்ணு. நானும் கிளம்புறேன். தூக்கம் வருது
- ஓகே. குட் நைட். பை.
- பை.

March 01, 2008

தீண்டும் இன்பம் - சிறுகதை

மீதமிருந்த கால் பாட்டில் பீரையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு காராபூந்தியை மேய ஆரம்பித்தான் வேந்தன். வேந்தனின் ரெண்டாவது பாட்டில் மூடியைப் பல்லால் கடித்து திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் ரகு.

‘நண்பா, இன்னைக்கு மதுரைக்குப் போய்ட்டு வரும் போது பஸ்ஸில ”மூன்றாம் பிறை” படம் போட்டானுங்க’ – வேந்தன்.

‘ம்ம்ம்.....’ என்று சொல்லியபடி பாட்டிலைத் திறந்ததும் அதிலிருந்து பொங்கிய பீருக்குள் ஒரு கடலைப் பருப்பைப் போட்டு அமைதியாக்கினான் ரகு.

‘ ”பொன்மேனி உருகுதே, என் ஆசை பெருகுதே” அந்தப் பாட்டு பாத்திருக்கியா’

‘ம், பாத்திருக்கேன். ஆனா பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அந்தப் பாட்டுக்கு என்ன?’

‘அந்தப் பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சில்க் ஸ்மிதாவோட உதட்டுக்கு ஒரு க்ளோசப்-ஷாட் வச்சிருக்கான் பாரு. ஆஹா, அட்டகாசம்டா. அப்படியே சொக்கிட்டேன். கவர்ச்சின்னு எதைஎதையோ சொல்றானுங்க. உண்மையான கவர்ச்சியை இன்னைக்கு தாண்டா பாத்தேன். அந்த உதடுகள் ரெண்டும் ஒட்டாமல் லேசா திறந்திருக்கு. அந்த கேப்ல மேல் வரிசைப் பல் ரெண்டு மட்டும் லேசா தெரியுது. அய்...யோ’ தலையை லேசாக உலுக்கிக் கொள்கிறான். ‘தமிழ் சினிமாவோட ஒரே கவர்ச்சிக் கன்னி சில்க் தான்டா’

‘இதுவரைக்கும் கவனிச்சு பாத்ததில்ல. அடுத்தவாட்டி எப்பவாவது டிவியில போட்டா பாக்குறேன். உன் ரசனையோட லட்சணத்த’

‘டிவியில என்னைக்கு போட, நீ என்னைக்கு பாக்க. அதான் உலக குப்பத் தொட்டி இருக்குதே’

‘என்னடா லூசு, உளர்ற’

‘இன்டெர்நெட்டைச் சொன்னேன். ஒரு நிமிஷத்தில தேடிரலாம்’

‘ஓ....சரி சரி. பாக்குறேன்’

‘ரெண்டாவது பாட்டில் பீர் ஓடுது’

‘அதுக்கென்னடா இப்போ’

‘அந்தரங்கம் அம்பலமாகும் நேரம்’

‘இவன் ஒருத்தண்டா. உலகத்திலயே பீர் அடிச்சிட்டு உளர்ற ஒருத்தன் நீயாத் தான் இருப்ப’

‘சரி, நான் உளரல. நீ இப்போ உன் காதல் கதையெல்லாம் வரிசையா சொல்வியாம். நான் கேட்டுக்கிட்டே மட்டையாவேனாம். சொல்லு, சொல்லு’

‘அது ஒரு கேவலமான கதைடா’

‘டேய், காதல்னாலே கேவலம் தாண்டா. சும்மா சொல்லு. கேவலக் கதை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’

‘சும்மா வெறுப்பேத்தினேன்னா அப்புறம் சொல்ல மாட்டேன்’

‘கோவிச்சிக்காத மச்சி. சொல்லு சொல்லு’

‘என் கதைய இதுவரைக்கும் யார் கிட்ட்யும் சொன்னதில்ல’ என்கிற பொய்யை 10 வது தடவையாகச் சொல்லி தொடர்ந்தான். ‘உன் கிட்ட மட்டும் தான் சொல்ல போறேன். யார் கிட்டயும் சொல்லீராத, சரியா’

(ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா, இந்த மாதிரி ஒரு டயலாக்கை விடாம, கதையை ஆரம்பிக்க மாட்டானுங்க. இருந்தாலும் கதை கேட்கும் ஆர்வத்தில் இருந்த வேந்தன், தொண்டை வரைக்கும் வந்த நக்கலை அடக்கியபடி) ‘சொல்லல, சொல்லு’ என்றான்.

‘நான் அப்போ படிச்சு முடிச்சிட்டு கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில சைட் இன்ஞீனியரா சேந்திருந்தேன். அப்போ ஒரு லேடீஸ் காலேஜ்ல ஒரு கேண்டீன் கட்டட வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு அங்க தான் வேலை. ஒரு நாள் நான் வேலை முடிச்சு கிளம்பும் போது, ஒரு பொண்ணு என் சைக்கிளை வழிமறிச்சா. உங்க பேரு என்னன்னு கேட்டா. சொன்னேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, அப்படின்னு கேட்டா. யோசிக்கக் கூட நேரமில்லை. அந்த மாதிரி ஒரு கிடுக்குப் பிடி.
யாரு நீங்க? இப்படி திடுதிப்புன்னு வந்து பேசுறது நல்லா இல்லைங்க, அப்படின்னேன்.
என் பேரு ராணி. தேர்ட் இயர் பிசிக்ஸ் படிக்கிறேன். யோசிச்சி நல்ல முடிவா சொல்லுங்க. நாளைக்கு இதே இடத்தில மீட் பண்ணுவோம் னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நடந்து போக ஆரம்பிச்சிட்டா. இப்படித்தான் எங்க காதல் ஆரம்பிச்சது.

‘மச்சி, கலக்கல் கதையா இருக்கே. ஊமையா இருக்கிறவனுங்க கிட்ட தான் சூப்பர் சூப்பர் கதையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நிஜம் தான் போலருக்கு.’

‘குறுக்க பேசாத. அப்புறம் கதைய அப்படியே நிப்பாட்டிருவேன்’

‘சரி சரி பேசல. சொல்லு’

‘அவ பெரிய அழகியும் இல்ல. ரொம்ப அசிங்கமாவும் இல்ல. மறுநாள் சரி ன்னு சொல்லிட்டேன். அவ ஹாஸ்டல்ல தான் தங்கி படிச்சிக்கிட்டு இருந்தா. அப்புறம் அவ ஹாஸ்டல் நம்பருக்கு போன் பேசியே என் சம்பளப் பணம் எல்லாம் வீணாப் போச்சு. ஒரு நாள் ஒரே நேரத்தில் 200 ரூபாய்க்கு பேசினேன். அப்போ என் மாச சம்பளமே 2000 ரூபா தான். இப்போ நினச்சு பாத்தா எரிச்சலா இருக்கு.
ஒரு நாள் சினிமாவுக்கு போவோம்னு கூப்பிட்டா. எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. தெரியாத ஊர் தானேன்னு சரின்னு சொல்லி அவளைக் கூட்டிக்கிட்டு போனேன். கூட்டமில்லாத தியேட்டர். கடைசி வரிசையில் ஒரு ஓரமா உக்காந்திருக்கோம். ரெண்டு பேரோட கைகளும் உரசுது. ஏதோ ஒன்னு எங்க ரெண்டு பேர் கைகளுக்கும் ஊடே ஊர்றது மாதிரி இருந்துச்சு. எப்படி ஆரம்பிக்கன்னு நான் குழம்பிக்கிட்டு இருந்தேன். அவளும் அதே மாதிரி குழம்பிக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன். அப்போ மெதுவா என் தொடை மேல கைய வச்சா. பத்தி நிமிஷமாவது அப்படியே வச்சிருந்திருப்பா. அப்புறம் சுண்டு விரலை வச்சி சின்னதும் பெரிசுமா வட்டம் போட ஆரம்பிச்சா. அப்புறம் நானும் மெதுவா என் கையை எடுத்து அவ தோள் மேல போட்டேன்’

‘டேய் மச்சி, என்னடா சொல்ற. கேக்கும் போதே எனக்கு ஜிவ்வுங்குதே. அப்புறம் என்னடா ஆச்சு’

‘வாய ரொம்ப திறக்காத. அந்த மாதிரி 10 படமாவது பாத்திருப்போம். சில நேரம் தியேட்டரில் கூட்டம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் எரிச்சலா இருக்கும். படம் தொடங்குற வரைக்கும் யாரையாச்சும் காட்டி, ”அந்த ஆளு நம்மளையே பாக்குறான்” னு சொல்லுவா. எனக்கு எரிச்சலா இருக்கும். படம் பாத்துட்டு போகும் போது மனசு வெறுமையா இருக்கிற மாதிரி இருக்கும். நாம ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்கிறோம்னு தோணும். இனிமே தியேட்டருக்கு வரக் கூடாதுன்னு நினைப்பேன். ஆனா அடுத்த வாரமே ஆஜர் ஆயிடுவோம். வெக்கத்த விட்டு சொல்றேன்டா, ஒரு கட்டத்தில அவ உடம்பில என் கை படாத இடமே இல்லைங்கிற மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கும் அதே மாதிரி.
எங்களுக்குள்ள இருந்தது வெறும் காமம் மட்டும் தானாடா? நாங்க காதல் பண்றதா பேசிக்கிட்டதெல்லாம் வெறும் பொய்யா?’

‘ம்....அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நண்பா. உனக்கு வாய்ப்பு கிடச்சது. யூஸ் பண்ணியிருக்க. வாய்ப்பு கிடைக்காம ஒழுக்கம் பேசுறவங்க தான் நிறையப் பேரு இருக்காங்க’

‘அவளுக்கு லோக்கல்ல ஒரு பாட்டி வீடு இருந்துச்சு. சனி, ஞாயிறு பெரும்பாலும் அங்க தான் இருப்பா. ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அவங்க பாட்டி, பக்கத்து ஊர்ல ஒரு கோயிலுக்குப் போயிருக்காங்கன்னும், நைட் தான் வருவாங்கன்னும் சொல்லி என்னை அந்த வீட்டுக்கு வரச் சொன்னா. வந்து என்ன செய்யன்னு கேட்டேன். சும்மா பேசிக்கிட்டு இருப்போம்னு சொன்னா.
கிளம்பினேன். போகிற வழியெல்லாம் என்னென்னவோ சிந்தனை. சோஃபாவில் உட்காரச் சொல்லுவாளா? டீ ஏதாச்சும் தருவாளா? டீ குடிக்கிற சாக்கில் பக்கத்தில் வந்து உக்காருவாளா? எப்படி ஆரம்பிக்கிறது. பயமா வேற இருக்கு. யாராச்சும் வந்துட்டா.
காலிங் பெல்லை அழுத்துனேன். முன்னாடி இருந்த ரூம்ல இருந்த ஒரு ஜன்னல் திறந்துச்சு. அவ தலை மட்டும் தெரிஞ்சது.
உள்ள வா, கதவு திறந்திருக்குன்னு சொன்னா.மெதுவா கதவைத் திறந்து உள்ள போனேன். ஹால்ல யாருமே இல்ல. டிவி மட்டும் தனியா ஓடிக்கிட்டு இருந்துச்சு.
”ராணி” ன்னு மெதுவா கூப்பிட்டேன். பதில் இல்ல.
அந்த ஜன்னல் இருந்த ரூமுக்குள்ள பாத்தேன். சொல்லவே ரொம்ப அசிங்கமா இருக்குதுடா. பிராவும், ஜட்டியும் மட்டும் போட்டுக்கிட்டு கட்டில்ல குப்புறப்படுத்திருந்தாடா. ஒரு செகண்டு என்ன பண்றதுன்னே புரியல. உடம்பெல்லாம் பதறுது. அப்படியே அந்த வீட்ட விட்டு வெளியேறிட்டேன்.
அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. மறுபடியும் மறுபடியும் அதே நினைப்பு’

‘நீ என்ன நினைச்சு போனியோ, அதுக்காகத் தான் அந்தப் பொண்ணும் ரெடியா இருந்திருக்கா. கொஞ்சம் வெளிப்படையா இருந்ததால, நீ பயந்துட்ட. அப்புறம் என்ன ஆச்சு’

‘மறுநாள் போன் பண்ணினா. ”ரொம்ப சாரி. அந்த மாதிரி நான் நடந்திருக்கக் கூடாது” அப்படின்னு சொன்னா.
“நீயெல்லாம் ஒரு தமிழ் பொண்ணா. நினைச்சாலே அசிங்கமா இருக்கு. ஏன் உன் புத்தி இப்படி போகுது” அப்படின்னு பெரிய ஒழுக்கவான் மாதிரி பேசினேன்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு பெருந்தன்மையா மன்னிச்சிட்டேன்னு சொன்னேன்.
அப்புறம் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்குள்ள பேச்சு குறைய ஆரம்பிச்சது. தியேட்டருக்குப் போறதும் நின்னு போச்சு.
ஒரு நாள் போன் பண்ணி “எங்கப்பா மாப்பிள்ளை பாத்து வச்சிருக்காரு. என்ன பண்றதுன்னு புரியல. அப்பா மனசை நோகடிக்கவும் எனக்கு பயமாயிருக்கு. நமக்குள்ள ஜாதிப் பிரச்சனை வேற இருக்கு” அப்படின்னு புலம்பினா.
”நான் உன்னை மறந்துடணும்” அப்படித்தானே. இதைக் கேக்கும் போது எனக்கு தொண்டைய அடைக்கிற மாதிரி இருந்துச்சு.
“நான் அதுக்காக சொல்லல” அப்படின்னா. போனை கட் பண்ணினேன்.
அதுக்கப்புறம் நாலு தடவை போன்ல பேசினா. ஒரு தடவை நேர்ல பாத்து பேசுனோம். அத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு. கொஞ்ச நாள் லூசு மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் இங்க திருச்சிக்கு இப்போ வேலை பாக்கிற இந்த கம்பெனிக்கு மாறி வந்தேன். மூணு வருஷம் ஓடிடுச்சு. புள்ள குட்டியோட சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறேன்.’

‘சரி விடு மச்சி’ ரகுவின் தோளில் ஆதரவாய் தட்டினான்.

காலி பீர் பாட்டிலகள் ஓரமாய் ஒதுங்கி இருந்தது. வேந்தன் தரையில் படுத்தபடி ஓடுகிற ஃபேனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்துக்கு அறையே அமைதியாக இருந்தது.

‘பொன் மேனி.......ஹ்ஹா....உருகுதே,
என் ஆசை.......ஹ்ம்ம்.....பெகுகுதே’ வேந்தன் அடிக்குரலில் பாட ஆரம்பித்தான். ரகுவின் மனதில் அந்த படுக்கையறைக் காட்சி ‘ஈ’ மாதிரி மொய்த்துக் கொண்டே இருந்தது.

February 21, 2008

உ.வே.சா.வும், சங்க இலக்கிய வாரமும்

இன்று மாலை எதேச்சையாக சாலையோரம் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ் செம்மொழி உயராய்வு மையம், மைசூர் உம் சேர்ந்து நடத்திய சங்க இலக்கிய வாரம். தமிழ் நாடு முழுக்க ஒரே நேரத்தில் 100 இடங்களில் இது போன்ற கூட்டத்தை நடத்துகிறார்களாம்.
ஏதாச்சும் வெட்டி மொக்க போடுவானுங்கன்னு நினைச்சு போய் உட்கார்ந்தேன். ஆனால் உருப்படியாகவே பேசினார்கள்.
முந்தா நாள் (19-02-08) அன்று உ.வே.சா பிறந்த நாள். அதை ஒட்டி இந்த
வாரத்தையே சங்க இலக்கிய வாரமாக அறிவித்து இந்த நிகழ்ச்சியை நடத்திக்
கொண்டு இருந்தார்கள்.
சங்க இலக்கியங்களைக் காப்பாற்றிய பெருமை நம் தமிழ் தாத்தாவிற்கு
இருக்கிறது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் போய் பல
இடங்களிலிருந்தும் சேகரித்த ஓலைச்சுவடியைக் கொண்டு சங்க இலக்கியங்களை உயிப்பித்திருக்கிறாராம். அவரின் பெயரில் உள்ள 'உ' உத்தமதானபுரம் என்கிற அவரின் சொந்த ஊரைக் குறிக்கிறதாம். இன்னமும் அவர் ஊருக்கு செல்ல பேருந்து வசதி இல்லையாம். இடிந்து கிடந்த அவரின் வீட்டை நினைவுச் சின்னமாக அறிவித்து ஒரு கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் அரசு.

தமிழ் செம்மொழியாக் அறிவித்ததனால் என்ன பிரயோசனம்?
பிரயோசனம் தான். தமிழ் படித்த 500 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
இன்னும் 2000 பேருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகப்
பேசிக் கொண்டிருந்தார் பேச்சாளர் தமிழ் செல்வன் என்பவர்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த பின் மத்திய அரசு 40 கோடி ரூபாய்
செலவழித்திருக்கிறது. இன்னும் 1000 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது.
ஆனால் பிழைக்க மட்டுமே தமிழ் படித்த மக்களில் தமிழ் அறிஞர்களே இல்லை அவல நிலை தான் இப்போது இருக்கிறது என்றார்.

உ.வே.சா பற்றிய குறிப்பும், சங்க இலக்கியம் பற்றிய சிறு அறிமுகமும் கொண்ட ஒரு சிறு பதிப்பை ஒரு லட்சம் பிரதிகள் தமிழ் நாடங்கும் விநியோகித்திருக்கிறார்கள் இந்த வாரத்தில்.

பேச்சாளர் உரை முடிந்ததும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.
'கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து' பாடலுக்கு ஒரு 6 வயது சிறுமி அட்டகாசமாக ஆடினாள்.
அதற்கடுத்து 'ஆடல் கலையே தேவன் தந்தது' பாடலுக்கு 2 சுமாரான ஃபிகர்கள் மேடைத் தரையையே பார்த்தபடி பரதம் ஆடிக்
கொண்டிருந்தார்கள்.
நான் எஸ்கே.....ப்.

February 08, 2008

பார்வை விருந்து - சிறுகதை

சூரியப் பிரகாசத்தில் கதவில் ஊர்ந்து திரியும் வாலறுந்த பல்லியின்
கொல்லைப்புறத்தில் வைதேகியின் சப்தத்தில் மிதந்து போகும் புகை வளையத்தின்
ஊடாக கிளாவர் எட்டு, டயமண்ட் ஆறு சேர்த்து செய்த வெண்கலச் சிலையாய் நின்ற
வெண்ணெய் நிறப் பெண்ணின் திறந்த முதுகில் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சென்ற கேபிள் டிவிக்காரனின் முட்டியை உடைக்கனும்.

பயப்படாதீங்க. நம்ம கதாநாயகன் இன்னமும் தூக்கத்தில் இருந்து முழுமையாக
விடுபடவில்லை. விழிப்புக்கு முந்தைய நிலையில் (pre-conscious stage)
அவனின் சிந்தனையில் பிறந்த வார்த்தைகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.

- தொடர்கிறது-
- 'ஏங்க' வைதேகியின் குரல் அதட்டலாக உயர்ந்திருந்தது. 'இவ்ளோ நேரமாவா
தூங்குவீங்க, மணி 9 ஆகப் போகுது'
நம் கதாநாயகனின் பெயர் மணி அண்ணாச்சி. சிறு தொழில் அதிபர். அண்ணாச்சி கண் விழிக்கிறார். இன்று எதையோ சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவரின் கண்களில் தெரிகிறது. அவசரவசரமாக எழுந்து மேஜையைத் திறந்து பேப்பரும், பேனாவும் எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.

பெறுநர்
உதவி காவல் ஆய்வாளர் அவர்கள்,
டவுன் காவல் நிலையம்
சிவகாசி

மதிப்பிற்குரிய ஐயா,
நேற்று, என்னுடைய அலுவலக வேலை முடிந்து இரவு 11 மணிக்கு தான் வீடு திரும்பினேன். நேரப் போக்குக்காக அப்போது டிவியை ஆன் செய்தேன். அப்போது
டிவியில் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. அப்பட்டமான
படுக்கையறைக் காட்சிகள் கொண்ட நீலப் படத்தை கேபிள் டிவிக்காரர்கள்
ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஏதாகிலும் வீட்டில் குழந்தைகள் இதைப் பார்க்க நேர்ந்தால். நினைத்தாலே பீதி கிளம்புகிறது. நம்முடைய மரபான கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கேபிள் டிவிக்காரர்களின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த இழிவான செயலைச் செய்த விஷமிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
-மணி-
(உரிமையாளர் - டி.கே.எஸ். மேச் இன்டஸ்ட்ரீஸ்)

ஏட்டு கடிதத்தை வாங்கிப் படிக்கிறார்

- என்ன அண்ணாச்சி, நானும் தான் நேத்து அந்தப் படத்தைப் பாத்தேன். வாரம்
ஒரு நாள் தான் போடுறானுங்க. போட்டுட்டுப் போகட்டுமே
- சார், உங்களால நடவடிக்கை எடுக்க முடியுமான்னு மட்டும் சொல்லுங்க.
இல்லாட்டி மேலிடத்துக்கு போக வேண்டி வரும்
- வேண்டாம் அண்ணாச்சி, நீங்க அரசியல்வாதிங்க. எனக்கெதுக்கு வீண்
பொல்லாப்பு. கேபிள் டிவிக்காரன் எனக்கு தெரிஞ்சவன் தான். இனிமே இப்படி
படம் காட்டக் கூடாதுன்னு சொல்லிடுறேன். நடவடிக்கை எல்லாம் எதுக்கு?
- சரிங்க சார். அடுத்த வாரம் இந்த மாதிரி நடந்தா, அப்புறம் நான் வேற
மாதிரி தான் போக வேண்டி இருக்கும்.
- நான் பாத்துக்கிறேன் அண்ணாச்சி. ஆபிஸ் செலவுக்கு ஏதாச்சும் கொடுத்திட்டு போங்க.
அண்ணாச்சி சட்டைப் பைக்குள் கையை விட்டு 500 ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார்.

அண்ணாச்சியின் கடமையுணர்வு, கலாச்சாரப் பாதுகாப்புணர்வு பற்றி தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லையா. இல்லை, நீங்க தெரிய வேண்டியது இன்னமும் நிறைய இருக்கு.

அண்ணாச்சி, தன்னைத் தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டாலும், முதலில்
அவர் ஒரு வேட்டைக்காரர், இரண்டாவதாக ஒரு அரசியல்வாதி, மூன்றாவது தான்
தொழில். மது, மாது, சூது. கோரஸாக வரும் இந்த மூன்று வார்த்தைகளும் தான் ஒரு ஆணின் வீழ்ச்சிக்கு பெரிய காரணம்னு பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். மணி அண்ணாச்சிக்கு அந்த மூன்றாவது விஷயத்தின் மேல் தான் ஏகப் பிரியம். சீட்டு விளையாடப் போவதைத் தான் வேட்டைக்குப் போவதுன்னு சொல்வார். ஒரு சூதாடியின் கைகளை மணிக்கட்டோடு சேர்த்து வெட்டினாலும், காயம் ஆறிய பின் முழங்கையால் சீட்டு பிடித்து விளையாடுவான் என்பார்கள். நம்ம வேட்டைய ராஜாவும் அந்த கேஸ் தான்.

உள்ளூர் விளையாட்டில் 100, 200 வைத்து தான் விளையாடுவார்கள். வேட்டைய
ராஜா வாரம் ஒருமுறை வேட்டையாட மதுரைக்கு போவார். அங்கே ஆயிரங்களில்
விளையாடுகிறார்கள். எல்லாம் கள்ளத்தனமாக நடக்கிறது.

நேற்று இரவு 10 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. வேட்டைய ராஜாவுக்கு நேற்று
நல்ல அதிர்ஷ்டம். மூன்று கேம் வரிசையாக ஜெயித்தார். நடுவில் இயற்கை உபாதை அடிவயிற்றை முட்ட கழிப்பறைக்குச் சென்றவர் திரும்பி வந்த போது, அதுவரை
அத்தனை ஆட்டக்காரர்களும் ஊதித் தள்ளிய சிகரெட் புகை மட்டுமே அறையில்
இருந்தது.
இங்கே சக ஆட்டக்காரர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. சேகர்,
ஆனந்த், குருமூர்த்தி, செளந்திர பாண்டியன். நாலு பேருமே அண்ணாச்சிக்கு
தொழில் முறை நண்பர்கள். குருமூர்த்தி தவிர மற்ற அனைவரும் மணியைப் போலவே தீவிர சூதாடிகள். குருமூர்த்தி ஒரு குவாட்டர் முடியும் வரை
விளையாடிவிட்டு மல்லாக்கப் படுத்து விடுவார். இந்தக் கூட்டத்திலேயே
ஆனந்த் மட்டுமே இளையவர். வயது 52. மற்ற எல்லாருமே ரிட்டையர்டு கேசுகள்.
அறுபதாம் கல்யாணம் பார்த்தவர்கள்.

ஆட்களைத் தேடியபடியே மணி அண்ணாச்சி பக்கத்து அறைக்குள் பிரவேசித்தார்.
கனமான மவுனம் அங்கே நிலவியது. அத்தனை சூதாடிகளின் கண்களும் அங்கிருந்த
தொலைக்காட்சித் திரையில் குத்திட்டு நின்றன.

குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வருகிறாள் ஒரு வெள்ளைக்காரி. வெண்ணிற டவலைச் சுற்றியிருக்கிறாள். கட்டிலில் அமர்ந்திருக்கும் வெள்ளைக்காரனை
ஒரு காமப் பார்வை பார்க்கிறாள். இப்போது கேமரா, நாயகியின் பின்னால்
நின்றபடி நாயகனைப் பார்க்கிறது. டவல் நழுவுகிறது. நாயகியின் வெண்ணிற
முதுகுக்குள் கேமரா மூழ்குகிறது.

மணி அண்ணாச்சிக்கு எரிச்சல் அடி வயிற்றிலிருந்து கிளம்புகிறது. அண்ணாச்சி
போர்னோ படங்களுக்கு எதிரானவர் இல்லை என்ற போதிலும் சூதாடும்
சுவாரஸ்யத்தில் இருந்தவரின் மனம், அந்தப் படத்தை நாடாமல் சக
ஆட்டக்காரர்களின் மேல் கோபமாக வெளி வரக் காத்திருந்தது.

குருமூர்த்தி - 'இப்போ ஒரு மாசமா தான் போடுறானுங்களாம். அதுவும் வாரம்
ஒரு நாள் தானாம்'
சேகர் - 'அட, வெண்கலச் சிலை மாதிரி என்ன ஒரு அழகு. நம்ம ஊர்லயும் தான்
இருக்காளுங்களே'
குருமூர்த்தி - 'அப்படிச் சொல்லாதப்பா. நம்ம ஊரு பொண்ணுங்களும் முதல்ல
நல்லா தான் இருக்காளுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் மூணு பங்கா பெருத்துடுறாளுங்க'

மணி - 'யோவ், உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்ல. விளையாட வந்துட்டு இப்படி
வெக்கமில்லாம உக்காந்து படம் பாக்குறீங்களே. வாங்கப்பா எந்திரிச்சு'
சேகர் - 'பேசாம போ. படம் முடிஞ்சதும் தான் வருவோம். பெரிய இவன் மாதிரி
பேசுற. அசிங்கமாம்ல, அசிங்கம்'
மணி - 'கிழட்டுக் ******ளா' இந்த வசவைக் கடுமையாகப் பிரயோகித்தபின்
கையிலிருந்த சீட்டுக் கட்டை விசிறி அடிக்கிறார்.
மொத்த அறையும் சீட்டுகளால் நிறைகிறது. எல்லாருடைய முகத்திலும் பயமும்,
வெறுப்பும் கொப்பளிக்கிறது. மணி வெளியேறி இருந்தார். சூழ்நிலை கனமாக
இருந்தது. சீட்டுகள் அலங்கோலமாக்கியிருந்த அறையில் நீலப்படம் மட்டும்
வெறுமையாய் ஓடிக் கொண்டிருந்தது.

February 03, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

காமெடி படம்னு நினைச்சு பாக்கப் போனா கடுப்படிச்சிட்டானுங்களே. ரேஸ்கல்ஸ்.

படத்தில் பெரிசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இரண்டு எரிச்சல்களைத் தவிர.

1) கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணை, படி தாண்டியமைக்காக காலில் லாடம் கட்டுகிறார்கள் எமலோகத்தில். அப்பட்டமான ஆணாதிக்கப் பண்பாட்டை வலிந்து திணிக்கிறார்கள். ஒளவையின் காலத்திலிருந்தே இந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது.
“ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு” - கொன்றை வேந்தன். எவ்வளவு மோசமான அடக்குமுறை. ஒளவையே ஒரு ஆணோ என்று கூட சந்தேகம் வருகிறது.

2) ஒரு இடத்தில் அழகப்பன், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த வந்த ஒருவனை, ‘நீ, உன் சின்னம்மாவின் மகளோடேயே' என்று தேவலோகத்தில் படித்த அவன் பற்றிய ரகசியத்தைச் சொல்வதான காட்சி. விலக்கப்பட்ட உறவுமுறை (இன்செஸ்ட்) யின் மீதான எதிர்ப்பைக் காட்டி கலாச்சாரக் கொடி நாட்டுகிறார்கள்.

தேவலோக கன்னி ரம்பை பூலோகம் வந்து அழகப்பனின் மேல் காதல் கொள்கிறாள்.
ரம்பையின் வேண்டுகோளை ஏற்று தினமும் இரவில் தேவலோகம் போய் வருகிறான்
அழகப்பன். அங்கே சில குளறுபடிகளைச் செய்த அழகப்பனையும், அவனை அழைத்து
வந்த ரம்பையையும் இந்திரன் சபிக்கிறான். அவர்கள் சாப விமோசனம் அடைந்தது
எப்படி என்பது கதை. கதைச்சுருக்கம் கேட்பதற்கு அழகாகத் தோன்றினாலும்,
நகைச்சுவையாக இந்தப் படத்தை நகர்த்தி இருந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும். நடுவில் சொன்ன அந்தக் குளறுபடி மூலமாக, சமுதாய நல்வழிக்
கதையாகப் படத்தை நகர்த்த முனைந்ததில் படம் சறுக்குகிறது.
அந்தக் குளறுபடி என்ன?

தேவலோகத்தில் தான் கண்ட மனிதர்கள் பற்றிய ரகசியங்களை பூலோகத்தில் வந்து
சொல்லி மக்களை நல்வழிப் படுத்தி ஒரு உட்டோபியன்(utopia) உலகத்தைச்
சிருஷ்டிக்கிறார்கள். மக்கள் எல்லாம் திருந்துகிறார்கள். உலகமே அமைதிப்
பூங்காவாகிறது. நரகத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில்
பூஜ்ஜியமாகிறது. சமுதாயப் பார்வையை விடுத்து ஒரு மனிதனின் அனுபவமாக
மட்டும் பதிவு செய்யப் பட்டிருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்குமோ
என்னவோ.

படத்தின் சிறப்பு, கூட்டம் கூட்டமாக அவ்வப்போது வரும் நாபிக் கமலங்கள்.
இதுவரை வந்த தமிழ் படங்களை விட அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

மொத்ததில் இந்தப் படம் “பகஞ்சரி பட்டு, முகஞ்சரி மொட்டு”
நீங்கள் - அப்படின்னா?
நான் - தயவு செய்து இந்தப் படத்துக்கு போகாதீங்க.

January 12, 2008

ஒரு தூக்கக் கலைவில்

ஏனோ வந்துவிடுகிறது
என்னறை வெளிச்சம்

எல்லாவற்றையும்
பார்வைக்கு கொணருவது மாதிரி

எங்கும் வெளிச்சம்
எல்லாம் வெளிச்சம்

இருட்டு மண்டியே கிடக்கிறது
உணர்ச்சிக்காத பார்வைகளில்

பார்வை பொய்

பூதமாய், சிரிப்பாய், சூன்யமாய் இருக்கிறது
என் சன்னல் விளாம்பழ மரம்

எங்கெங்கும் எங்கெங்கும்
ஒரு கனவு
அது பற்றிய சிந்தனை
ஒரு சிந்தனை
அது பற்றிய கனவு
இருட்டுலகத்தில்

January 05, 2008

சேரிடமறிந்து சேர்

இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு பைக்கை வீட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து கூச்சல். காளீஸ்வரி காலேஜ் பேருந்து. இருபாலரும் பயிலும் கல்லூரி தான். ஆனால் இந்தப் பேருந்தில் பெண்கள் மட்டும் செல்கிறார்கள். ஏதாகிலும் லோக்கல் விசிட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நேரத்தில் கல்லூரிப் பேருந்தைப் பார்க்க முடியாது. உள்ளே ஆசிரியர்களும் இல்லை போலிருந்தது. சப்தம் சாலையை நிறைத்தது.

அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் (ஆள் அட்டகாசமாக இருந்தாள்) மெல்லத் திரும்பி, ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் ஒரு குறும்பு சிரிப்பு. பிறகு மெதுவாகக் கையை ஆட்டினாள், என்னை நோக்கி. 'ஆஹா...பரவாயில்ல. நம்ம ஊரு (சிவகாசி) பொண்ணுங்க கூட தேரீட்டாங்க' ன்னு நினைச்சு, நானும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கை அசைத்தேன்.

இந்த இடத்தில சிவகாசி ஊர், கலாச்சாரக் காவலர்களைப் பத்தி நீங்க கொஞ்சம் தெரிஞ்சிக்கனும். மற்ற பள்ளிகள், பெண்களைச் சுரிதாருக்கு மாற்றி இருந்த போதும், நான் படித்த பள்ளி இன்னமும் தாவணிக் கனவில் இருந்து விடுபடாமலேயே இருக்கிறது. இதில் என்ன இருக்கிறது, என்கிறீர்களா?. இருக்கிறது. இத்துனூண்டு இடுப்பு தெரிந்தாலே, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிடுவார்கள் கலாச்சாரக் காவலர்கள். இடுப்பை மறைக்க பெண்கள் படும் பாட்டை நினைத்தாலே பாவமாயிருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெண்களின் கை இடுப்பிலேயே மையம் கொண்டிருப்பதை எங்கள் பள்ளியில் பார்க்கலாம்.

இது பரவாயில்லை. வருடத்தின் முதல் பாடநாளில் பிரேயர் முடிந்தவுடன், பசங்க மட்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவோம். பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பிரேயர் நடக்கும். தங்களின் உடை விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய கவனம் பற்றியதும், பையன்களிடம் பேசாமல் இருந்து தங்களின் நெறி வழுவாமல் காத்துக் கொள்வதும், தங்களின் பெற்றோரின் நன்மதிப்பிற்கு களங்கம் விளைவிக்காததும் பற்றியதும் தான் அந்த ஸ்பெஷல் பிரேயர் என்று எந்தப் பெண்ணும் எங்களிடம் சொன்னதில்லை. நாங்களாக யூகித்தது. 200% சரியான யூகம் தான்.

என் நண்பர் ஒருவர் சிவகாசியில் உள்ள மற்றொரு கல்லூரியில் படித்தவர். PHYSICS LAB போகும் வழியில் தான் பெண்கள் அறை இருக்குமாம். ஒரு பையன் அந்த இடத்தைக் கடக்கும் போது, தலையைக் குனிந்தபடியே தான் செல்ல வேண்டுமாம்.
வகுப்பறையில் முன் வரிசைகளில் ஆண்களும், பின் வரிசையில் பெண்களும் உட்கார வேண்டுமாம். ஆண்கள் பின்னால் உட்கார்ந்தால், முன்னால் இருக்கும் பெண்களின் முதுகைப் பார்ப்பானுங்களாம்.
கல்லூரியில் மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்தது, தெரியவந்தால் ஃபைன் கட்ட வேண்டுமாம். அதுவும் இலை பிடுங்கியவனின் தகப்பனார் வந்து கட்ட வேண்டும்.

சரி, இப்போது நிகழ் காலத்துக்கு வருவோம்.
காலையில் வழக்கமாக இதே பேருந்தில் 'உம்மன்னா' மூஞ்சிகளாகப் போகும், அதே பெண்கள் தானா இவர்கள்? கலாச்சாரக் காவலர்களின் தலையில் ஓங்கிக் குட்டியது மாதிரி இருந்தது அந்தப் பெண்ணின் கையசைப்பு.

அந்த 'அட்டகாசம்' கை அசைத்த நேரத்தில், அவளைச் சுற்றி ஒரு கூட்டமே கூடி இருந்தது. இப்போது நிறைய கைகள். அதில் ஒரு கை, என் முகவாய்க்கட்டையை உடைப்பேன் என்றது. கைக்கு சொந்தக்காரியின் நாக்கும், கண்களும் வெளித் தள்ளியபடி ஆனால் ஆக்ரோஷமில்லாமல் இருந்தது. எனக்கு சுரீர் என்றது. வண்டியை வேகமெடுத்து பேருந்தை முந்திச் சென்றேன். முந்தும் போது ஓ! என்று பெருங்கூச்சல்.

இப்போது தலைப்புக்கு வருவோம்.

சேரிடமறிந்து சேர் - ஆத்திச் சூடி
"அடடா. ஏதோ அட்வைஸ் ஆரம்பிக்கப் போறான்டா" ன்னு பயப்படாதீங்க.

போன பதிவில் சொன்ன புத்தகம் "
ஒளவையின் உளவியல், ஃப்ராய்டு லெக்கானின் மன அலச" லில் 'சேரிடமறிந்து சேர்' பற்றி ஆசிரியர் ஐ.க.பாண்டியன் கூறுவது:
"சேரும் இடம் சரியானதாக இல்லையென்றால், ஒருவன் வல்லவனாகவோ, நல்லவனாகவோ இருந்து மட்டும் பிரயோஜனமில்லை. அவன் அந்தச் சூழலுக்குள் தொலைந்து, அந்தக் குழுவின் கருத்துக்களையே தன்னுடைய கருத்தாக எண்ணும் அபாயமும் நேரலாம்".

ஒரு குழுவாக இயங்கும் போது, தனிமனிதனிடம் உண்டாகும் கூட்டுப் பிரக்ஞை (COLLECTIVE CONSCIOUSNESS), பயமின்மை (LACK OF FEAR) பற்றி ஃப்ராய்டு கூறுவது: "குழுவின் எல்லை மீறிய விழுமியங்களால் (TRANSCENDING) தனியனின் சொந்த, தனிப்பட்ட ஆளுமையும், தற்காதலும் (NARCISSISM) நிர்மூலமாக்கப்படுவதால் இந்தப் பயமின்மை உருவாகிறது".

குழுவுக்குள் இயங்கும் தனியனின் ஆற்றல்களோ, அபத்தங்களோ அளவிட முடியாததாய் இருக்கிறது. இதே மாதிரியாக குழுக்களுக்குள் என்னைத் தொலைத்த கணங்களையும், குழுவின் மொழியான சிறு சேட்டைகளைச் செய்ததையும், கூச்சலிட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.