July 11, 2021

பதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

 பாதேர் பாஞ்சாலி- (பாதையின் பாடல்)

விபூதிபூஷண் பந்தோபாத்யாய்


மூங்கில் காட்டினருகில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே வறுமையின் பிடியில் ஒரு பிராமணக் குடும்பம் ஹரிஹர் ஒரு புரோகிதர். கிடைத்த இடத்தில் புரோகிதம் செய்து அவர் கொண்டு வரும் சொற்ப பணத்தில் குடும்பம் நடத்தத் திணறுகிறாள் அவரின் மனைவி சர்வஜயா. துர்கா மற்றும் அப்பு என இரு குழந்தைகள். ஹரிஹருக்கு அக்கா முறையில் தூரத்து உறவான இந்திர் என்ற கிழவியும் அங்கே வசிக்கிறாள். 



சர்வஜயாவுக்கு இந்திரை பிடிப்பதில்லை. தன் பிள்ளைகளுக்கு கெடுபுத்தியைக் கற்பிக்கிறாள் என்று பழிக்கிறாள். 

துர்க்காவின் இறப்பு, அத்துடன் துரத்தும் தரித்திரம். வாழ்வதற்கும் தகுதியில்லாததாக தங்களின் கிராமம் மாறிப்போனதை உணர்கிறார்கள். ஊரை விட்டு வெளியேறுவதென முடிவெடுக்கிறார்கள். பிழைப்பு தேடி காசிக்கு கிளம்பி செல்வதாக படம் முடிவடைகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் தனது ப்ளாக்கில், துர்க்கா தன்னை மிகவும் கவர்ந்து விட்டாளென்றும், முதல்முறையாக படம் பார்த்தபோது , துர்க்கா வின் மரணத்துக்குப் பிறகான காட்சிகளைப் பார்க்கமுடியாதபடி மனம் கனத்து இருந்ததாகவும் எழுதியிருந்தார்.


எனக்கு இந்திர் கிழவியைத்தான் மிகவும் பிடித்திருந்தது. ஒடிசலான தேகம். வளைந்த கூன். பொக்கை வாய்ச் சிரிப்பு. மாறுகண். வயதான காலத்தில் எங்காவது ஒண்டி வாழவேண்டிய அவலம்.

சர்வஜயா வீட்டில் அனுமதிக்க மறுத்ததும், குடிக்க தண்ணீர் கேட்கிறாள் கிழவி. அந்த சாக்கில் கிழவி, அசடும் பரிதாபமும் வழியும் சிரிப்புடன் சர்வஜயாவின் முகத்தைப் பார்க்கிறாள். எப்படியாவது தன்னை ஏற்றுக் கொள்வாள் என்கிற நப்பாசை. சர்வஜயாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. கிழவியின் சிரிப்பு அடங்கி முகம் இருள்கிறது. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு, தான் வளர்ந்துவரும் செடிக்கு மீதி தண்ணீரை ஊற்றி விட்டுக் கிளம்புவாள் கிழவி. பாட்டியின் நடிப்பிற்கு ஒரு சோறு பதம், அந்தக் காட்சி.

இந்திர் கிழவி, என் அய்யம்மாவை நினைவுபடுத்துகிறாள். எனது சிறுவயதில், ஆண்டுக்கொரு முறை வந்து ஓரிரு மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கிச் செல்வார் அய்யம்மா.


இந்தப் பிள்ளையாவது தன்னை நன்றாக கவனிப்பான் என்ற எண்ணத்துடன் வருவார். அந்தப் பிள்ளையின் கவனிப்பே பரவாயில்லை என்று திரும்பிச் செல்வார். 

முதுமை கொணர்ந்து சேர்த்த பார்வைக்குறைபாடு, காது மந்தம், மறதி, குறை கூறல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என் அத்தனை சிக்கல்களும் அவருக்கு இருந்தன. வேண்டா விருந்தாளியாக அய்யம்மாவைக் கருதியததை இப்போது நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது. அய்யம்மா மீது என் அக்காவுக்கு மட்டும் தனிப்பாசம் இருந்தது. இந்திர் மீதும் துர்க்காவுக்கு அதே போன்ற அன்பைக் காணமுடிந்தது

February 21, 2021

ஐயா சொன்ன சுடலைக் கதை

 

மல்லாங்கிணத்துக்கு கிழக்க இருக்குது முடியனூர். அங்க பெரியாண்டி னு ஒருத்தர் இருந்தாரு. பெரிய சண்டியரு. அவருக்கு கூட்டாளிங்க வளையாங்குளத்துல இருந்ததாச் சொல்லுவாங்க. யாருக்காச்சும் யாரையாச்சும் பிடிக்கலைன்னா பெரியாண்டியப் பாத்து வெவரத்தைச் சொல்லி கேக்குற காசக் குடுத்தாப் போதும். மிரட்டுறது, அடிதடி, வெள்ளாமக்காட்டுல அழிமாண்டம் பண்றது,  வைக்கப்படப்புக்கு தீ வைக்கிறதுன்னு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு. ஒருத்தர் கிட்ட காசு வாங்கிட்டு அவரோட எதிரி காட்டுல மெளகாச் செடிகளை மொத்தமும் பிடிங்கிப்போடுறது, அப்புறம் அந்த ஆளு கிட்ட காசு வாங்கிட்டு முதல்ஆளு காட்டுல துவரச்செடிகளை பிடுங்கி போடுறதுன்னு எல்லா வேலையும் பாப்பாரு.

மல்லாங்கிணத்திலிருந்து நம்ம ஊரு திம்மம்பட்டிக்கு போற பாதை இருக்குல்ல,  இப்பத்தான அது தார் ரோடு. முன்னாடி அது பள்ளமா இருக்கும். கம்மா நெறஞ்சா தண்ணி மாறுகால் பாயுற ஓடைல்ல அது. இரண்டு கரையிலயும் மஞ்சநெத்தி முளைச்சு கிய்யின்னு இருக்கும். ஸ்கூலுக்கு அந்த வழியாத் தான் போகணும். எப்பவாச்சும் பெரியாண்டி அந்த பாதையிலே வர்றாருன்னு தெரிஞ்சா நாங்கள்லாம் பயந்துக்கிட்டு முனியம்மன் கோயில் பாதைக்கு போயிருவோம்


அப்ப எங்க ஊர்ல சாமியடியான்னு ஒருத்தரு இருந்தாரு.  எங்க ராமண்ணே வீட்டுக்கு மேற்க ஒரு வீடு இருக்குல்ல. அந்த வீட்டுக்காரரு. அவரப் பிடிக்காத யாரோ போய் பெரியாண்டி கிட்ட சொல்லிட்டாக. அன்னிக்கு ராத்திரி பெரியாண்டியும் அவரு ஆளுகளும் சேந்து சாமியடியான் கிணத்துல கமலக்கல்ல உடைச்சிப்போட்டுட்டு வைக்கப்படப்புக்கு தீ வச்சுட்டாக.

சாமியடியான் அந்த நேரத்துல சுடுகாட்டுல இருந்திருக்காரு. ஒரு மூப்பமார் பையன் இறந்துட்டான்னு பிதைக்க வந்திருக்காரு. மூப்பமாரும் நம்மாளுகளும் அப்ப ஒன்னுமன்னுமாப் பழகிக்கிடுவாங்க.

மாமன் மச்சான்னும், அண்ணன் தம்பின்னும் உறவு சொல்லி கூப்பிடுக்கிடுவாக.  பள்ளம் தோண்டிக்கிட்டு இருந்தவரு மேற்க அவரு காட்டப்பக்கம் தீ எரியுற வெளிச்சத்த கவனிச்சிட்டாரு. கையில வச்சிருந்த கடப்பாரயத் தூக்கிக்கிட்டே ஓடியிருக்காரு. அங்கபோய்ப் பாத்தா படப்பு எரியுது, கமலக்கல்லு ஒடைஞ்சு கிடக்கு. ஊர்கூடிருச்சு.  எல்லாரும் நாலாப் பக்கமும் தேடுறாக.


பெரியாண்டியோட கூட்டாளிகள் எல்லாம் மொதல்லயே தப்பிச்சு ஓடிட்டாங்க. பெரியாண்டி கொஞ்சம் தொலவட்டுல ஒரு நாயக்கர் தோட்டத்துல நின்னு நாயக்கர் கூட பேசீட்டு அவர் தோட்டத்து கத்திரிக்காயை கொஞ்சம் புடுங்கிட்டு நிதானமா நடந்து போயிருக்காரு. சாமியடியான் பெரியாண்டியப் பாத்துட்டாரு. அவர்தான் படப்பக் கொளுத்துனார்னு இவர் சொல்ல, இவர் "இல்லை"ங்கன்னு பெரிய அமர்க்களம் ஆகி இரண்டு பேரும் அடிபுடின்னு மல்லுக் கட்டுறாங்க. அப்ப சாமியடியானோட நாய் பெரியாண்டி கால்ல வசமாக கடிச்சிருது. பெரியாண்டி வலியில சாயவும் சாமியடியான் கையிலிருந்த கடப்பாரய வச்சு பெரியாண்டி தலையில ஒரு போடு போடுறாரு. பெரியாண்டி அங்கேயே ஆள் காலி.


ஊர் ஒன்னு கூடி செஞ்ச கொலயை மறைக்கிறதுன்னு முடிவு பண்ணினாங்க. உடம்ப சாமியடியான் காட்டுக்கு தூக்கிட்டு போய் எரியிற படப்புல போட்டுட்டாங்க. அதுவும் எப்படி, துண்டு துண்டா வெட்டி.


மறுநாள் அந்தப் பக்கம் காட்டு வேலைக்கு வந்த பக்கத்துஊரு பொம்பளைங்க, "இதென்ன படப்புல யிருந்து சுடலை வாசம் வீசுது"ன்னு கேட்டிருக்காங்க. எங்க ஊர் பொம்பளைங்க, " அதான, நேத்து சாயந்திரம் பாம்பும் கீரியும் சண்டை போட்டு கிடந்துச்சு. உள்ள கிடந்து பொசுங்கி இருக்குமோ என்னமோ" ன்ருக்காங்க.


அப்புறம் போலீஸ் வந்துச்சு. மோப்ப நாய் வந்து சாமியடியான கவ்விப்பிடிச்சுச்சு. கோர்ட் கேஸுன்னு ஆகி கடைசியில எப்படியோ நிரபராதின்னு வெளிய வந்துட்டாரு.


பெரியாண்டியோட அட்டகாசம் அதோட முடிஞ்சிச்சா. அதான் இல்ல ஊர் பொம்பளைகளுக்குள்ள பேயா வந்து அப்பப்ப இறங்குவாரும்பாங்க. கிராமத்தில இதெல்லாம் சாதாரணம். "பெரியாண்டிடா நானு, அந்தப்பய என்ன கழுத்துல வெட்டுனான், இந்தப்பய என்ன மார்ல வெட்டுனான்"னு பேய் கொஞ்ச காலம் பேசிக்கிட்டு இருந்துச்சு அப்போ பேய் ஓட்டுறதுக்குன்னு நம்ம ஊர்ல ஒருத்தர் இருந்தாரு.  பேய்கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு "ட்டாட்டா டிட் டீ டு ட்டூ டு ட்டாடாட்டி" ன்னு கத்துவாரு. நாங்கள் அவர எங்கயாவது பாத்தா "டாட்டாட்டூட்டுடீ"ன்னு கத்துவோம். அவர் எங்கள அடிக்க துரத்துவாரு. வேடிக்கையா இருக்கும்.