March 01, 2008

தீண்டும் இன்பம் - சிறுகதை

மீதமிருந்த கால் பாட்டில் பீரையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு காராபூந்தியை மேய ஆரம்பித்தான் வேந்தன். வேந்தனின் ரெண்டாவது பாட்டில் மூடியைப் பல்லால் கடித்து திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் ரகு.

‘நண்பா, இன்னைக்கு மதுரைக்குப் போய்ட்டு வரும் போது பஸ்ஸில ”மூன்றாம் பிறை” படம் போட்டானுங்க’ – வேந்தன்.

‘ம்ம்ம்.....’ என்று சொல்லியபடி பாட்டிலைத் திறந்ததும் அதிலிருந்து பொங்கிய பீருக்குள் ஒரு கடலைப் பருப்பைப் போட்டு அமைதியாக்கினான் ரகு.

‘ ”பொன்மேனி உருகுதே, என் ஆசை பெருகுதே” அந்தப் பாட்டு பாத்திருக்கியா’

‘ம், பாத்திருக்கேன். ஆனா பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அந்தப் பாட்டுக்கு என்ன?’

‘அந்தப் பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சில்க் ஸ்மிதாவோட உதட்டுக்கு ஒரு க்ளோசப்-ஷாட் வச்சிருக்கான் பாரு. ஆஹா, அட்டகாசம்டா. அப்படியே சொக்கிட்டேன். கவர்ச்சின்னு எதைஎதையோ சொல்றானுங்க. உண்மையான கவர்ச்சியை இன்னைக்கு தாண்டா பாத்தேன். அந்த உதடுகள் ரெண்டும் ஒட்டாமல் லேசா திறந்திருக்கு. அந்த கேப்ல மேல் வரிசைப் பல் ரெண்டு மட்டும் லேசா தெரியுது. அய்...யோ’ தலையை லேசாக உலுக்கிக் கொள்கிறான். ‘தமிழ் சினிமாவோட ஒரே கவர்ச்சிக் கன்னி சில்க் தான்டா’

‘இதுவரைக்கும் கவனிச்சு பாத்ததில்ல. அடுத்தவாட்டி எப்பவாவது டிவியில போட்டா பாக்குறேன். உன் ரசனையோட லட்சணத்த’

‘டிவியில என்னைக்கு போட, நீ என்னைக்கு பாக்க. அதான் உலக குப்பத் தொட்டி இருக்குதே’

‘என்னடா லூசு, உளர்ற’

‘இன்டெர்நெட்டைச் சொன்னேன். ஒரு நிமிஷத்தில தேடிரலாம்’

‘ஓ....சரி சரி. பாக்குறேன்’

‘ரெண்டாவது பாட்டில் பீர் ஓடுது’

‘அதுக்கென்னடா இப்போ’

‘அந்தரங்கம் அம்பலமாகும் நேரம்’

‘இவன் ஒருத்தண்டா. உலகத்திலயே பீர் அடிச்சிட்டு உளர்ற ஒருத்தன் நீயாத் தான் இருப்ப’

‘சரி, நான் உளரல. நீ இப்போ உன் காதல் கதையெல்லாம் வரிசையா சொல்வியாம். நான் கேட்டுக்கிட்டே மட்டையாவேனாம். சொல்லு, சொல்லு’

‘அது ஒரு கேவலமான கதைடா’

‘டேய், காதல்னாலே கேவலம் தாண்டா. சும்மா சொல்லு. கேவலக் கதை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’

‘சும்மா வெறுப்பேத்தினேன்னா அப்புறம் சொல்ல மாட்டேன்’

‘கோவிச்சிக்காத மச்சி. சொல்லு சொல்லு’

‘என் கதைய இதுவரைக்கும் யார் கிட்ட்யும் சொன்னதில்ல’ என்கிற பொய்யை 10 வது தடவையாகச் சொல்லி தொடர்ந்தான். ‘உன் கிட்ட மட்டும் தான் சொல்ல போறேன். யார் கிட்டயும் சொல்லீராத, சரியா’

(ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா, இந்த மாதிரி ஒரு டயலாக்கை விடாம, கதையை ஆரம்பிக்க மாட்டானுங்க. இருந்தாலும் கதை கேட்கும் ஆர்வத்தில் இருந்த வேந்தன், தொண்டை வரைக்கும் வந்த நக்கலை அடக்கியபடி) ‘சொல்லல, சொல்லு’ என்றான்.

‘நான் அப்போ படிச்சு முடிச்சிட்டு கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில சைட் இன்ஞீனியரா சேந்திருந்தேன். அப்போ ஒரு லேடீஸ் காலேஜ்ல ஒரு கேண்டீன் கட்டட வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு அங்க தான் வேலை. ஒரு நாள் நான் வேலை முடிச்சு கிளம்பும் போது, ஒரு பொண்ணு என் சைக்கிளை வழிமறிச்சா. உங்க பேரு என்னன்னு கேட்டா. சொன்னேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, அப்படின்னு கேட்டா. யோசிக்கக் கூட நேரமில்லை. அந்த மாதிரி ஒரு கிடுக்குப் பிடி.
யாரு நீங்க? இப்படி திடுதிப்புன்னு வந்து பேசுறது நல்லா இல்லைங்க, அப்படின்னேன்.
என் பேரு ராணி. தேர்ட் இயர் பிசிக்ஸ் படிக்கிறேன். யோசிச்சி நல்ல முடிவா சொல்லுங்க. நாளைக்கு இதே இடத்தில மீட் பண்ணுவோம் னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நடந்து போக ஆரம்பிச்சிட்டா. இப்படித்தான் எங்க காதல் ஆரம்பிச்சது.

‘மச்சி, கலக்கல் கதையா இருக்கே. ஊமையா இருக்கிறவனுங்க கிட்ட தான் சூப்பர் சூப்பர் கதையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நிஜம் தான் போலருக்கு.’

‘குறுக்க பேசாத. அப்புறம் கதைய அப்படியே நிப்பாட்டிருவேன்’

‘சரி சரி பேசல. சொல்லு’

‘அவ பெரிய அழகியும் இல்ல. ரொம்ப அசிங்கமாவும் இல்ல. மறுநாள் சரி ன்னு சொல்லிட்டேன். அவ ஹாஸ்டல்ல தான் தங்கி படிச்சிக்கிட்டு இருந்தா. அப்புறம் அவ ஹாஸ்டல் நம்பருக்கு போன் பேசியே என் சம்பளப் பணம் எல்லாம் வீணாப் போச்சு. ஒரு நாள் ஒரே நேரத்தில் 200 ரூபாய்க்கு பேசினேன். அப்போ என் மாச சம்பளமே 2000 ரூபா தான். இப்போ நினச்சு பாத்தா எரிச்சலா இருக்கு.
ஒரு நாள் சினிமாவுக்கு போவோம்னு கூப்பிட்டா. எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. தெரியாத ஊர் தானேன்னு சரின்னு சொல்லி அவளைக் கூட்டிக்கிட்டு போனேன். கூட்டமில்லாத தியேட்டர். கடைசி வரிசையில் ஒரு ஓரமா உக்காந்திருக்கோம். ரெண்டு பேரோட கைகளும் உரசுது. ஏதோ ஒன்னு எங்க ரெண்டு பேர் கைகளுக்கும் ஊடே ஊர்றது மாதிரி இருந்துச்சு. எப்படி ஆரம்பிக்கன்னு நான் குழம்பிக்கிட்டு இருந்தேன். அவளும் அதே மாதிரி குழம்பிக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன். அப்போ மெதுவா என் தொடை மேல கைய வச்சா. பத்தி நிமிஷமாவது அப்படியே வச்சிருந்திருப்பா. அப்புறம் சுண்டு விரலை வச்சி சின்னதும் பெரிசுமா வட்டம் போட ஆரம்பிச்சா. அப்புறம் நானும் மெதுவா என் கையை எடுத்து அவ தோள் மேல போட்டேன்’

‘டேய் மச்சி, என்னடா சொல்ற. கேக்கும் போதே எனக்கு ஜிவ்வுங்குதே. அப்புறம் என்னடா ஆச்சு’

‘வாய ரொம்ப திறக்காத. அந்த மாதிரி 10 படமாவது பாத்திருப்போம். சில நேரம் தியேட்டரில் கூட்டம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் எரிச்சலா இருக்கும். படம் தொடங்குற வரைக்கும் யாரையாச்சும் காட்டி, ”அந்த ஆளு நம்மளையே பாக்குறான்” னு சொல்லுவா. எனக்கு எரிச்சலா இருக்கும். படம் பாத்துட்டு போகும் போது மனசு வெறுமையா இருக்கிற மாதிரி இருக்கும். நாம ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்கிறோம்னு தோணும். இனிமே தியேட்டருக்கு வரக் கூடாதுன்னு நினைப்பேன். ஆனா அடுத்த வாரமே ஆஜர் ஆயிடுவோம். வெக்கத்த விட்டு சொல்றேன்டா, ஒரு கட்டத்தில அவ உடம்பில என் கை படாத இடமே இல்லைங்கிற மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கும் அதே மாதிரி.
எங்களுக்குள்ள இருந்தது வெறும் காமம் மட்டும் தானாடா? நாங்க காதல் பண்றதா பேசிக்கிட்டதெல்லாம் வெறும் பொய்யா?’

‘ம்....அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நண்பா. உனக்கு வாய்ப்பு கிடச்சது. யூஸ் பண்ணியிருக்க. வாய்ப்பு கிடைக்காம ஒழுக்கம் பேசுறவங்க தான் நிறையப் பேரு இருக்காங்க’

‘அவளுக்கு லோக்கல்ல ஒரு பாட்டி வீடு இருந்துச்சு. சனி, ஞாயிறு பெரும்பாலும் அங்க தான் இருப்பா. ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அவங்க பாட்டி, பக்கத்து ஊர்ல ஒரு கோயிலுக்குப் போயிருக்காங்கன்னும், நைட் தான் வருவாங்கன்னும் சொல்லி என்னை அந்த வீட்டுக்கு வரச் சொன்னா. வந்து என்ன செய்யன்னு கேட்டேன். சும்மா பேசிக்கிட்டு இருப்போம்னு சொன்னா.
கிளம்பினேன். போகிற வழியெல்லாம் என்னென்னவோ சிந்தனை. சோஃபாவில் உட்காரச் சொல்லுவாளா? டீ ஏதாச்சும் தருவாளா? டீ குடிக்கிற சாக்கில் பக்கத்தில் வந்து உக்காருவாளா? எப்படி ஆரம்பிக்கிறது. பயமா வேற இருக்கு. யாராச்சும் வந்துட்டா.
காலிங் பெல்லை அழுத்துனேன். முன்னாடி இருந்த ரூம்ல இருந்த ஒரு ஜன்னல் திறந்துச்சு. அவ தலை மட்டும் தெரிஞ்சது.
உள்ள வா, கதவு திறந்திருக்குன்னு சொன்னா.மெதுவா கதவைத் திறந்து உள்ள போனேன். ஹால்ல யாருமே இல்ல. டிவி மட்டும் தனியா ஓடிக்கிட்டு இருந்துச்சு.
”ராணி” ன்னு மெதுவா கூப்பிட்டேன். பதில் இல்ல.
அந்த ஜன்னல் இருந்த ரூமுக்குள்ள பாத்தேன். சொல்லவே ரொம்ப அசிங்கமா இருக்குதுடா. பிராவும், ஜட்டியும் மட்டும் போட்டுக்கிட்டு கட்டில்ல குப்புறப்படுத்திருந்தாடா. ஒரு செகண்டு என்ன பண்றதுன்னே புரியல. உடம்பெல்லாம் பதறுது. அப்படியே அந்த வீட்ட விட்டு வெளியேறிட்டேன்.
அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. மறுபடியும் மறுபடியும் அதே நினைப்பு’

‘நீ என்ன நினைச்சு போனியோ, அதுக்காகத் தான் அந்தப் பொண்ணும் ரெடியா இருந்திருக்கா. கொஞ்சம் வெளிப்படையா இருந்ததால, நீ பயந்துட்ட. அப்புறம் என்ன ஆச்சு’

‘மறுநாள் போன் பண்ணினா. ”ரொம்ப சாரி. அந்த மாதிரி நான் நடந்திருக்கக் கூடாது” அப்படின்னு சொன்னா.
“நீயெல்லாம் ஒரு தமிழ் பொண்ணா. நினைச்சாலே அசிங்கமா இருக்கு. ஏன் உன் புத்தி இப்படி போகுது” அப்படின்னு பெரிய ஒழுக்கவான் மாதிரி பேசினேன்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு பெருந்தன்மையா மன்னிச்சிட்டேன்னு சொன்னேன்.
அப்புறம் கொஞ்ச கொஞ்சமா எங்களுக்குள்ள பேச்சு குறைய ஆரம்பிச்சது. தியேட்டருக்குப் போறதும் நின்னு போச்சு.
ஒரு நாள் போன் பண்ணி “எங்கப்பா மாப்பிள்ளை பாத்து வச்சிருக்காரு. என்ன பண்றதுன்னு புரியல. அப்பா மனசை நோகடிக்கவும் எனக்கு பயமாயிருக்கு. நமக்குள்ள ஜாதிப் பிரச்சனை வேற இருக்கு” அப்படின்னு புலம்பினா.
”நான் உன்னை மறந்துடணும்” அப்படித்தானே. இதைக் கேக்கும் போது எனக்கு தொண்டைய அடைக்கிற மாதிரி இருந்துச்சு.
“நான் அதுக்காக சொல்லல” அப்படின்னா. போனை கட் பண்ணினேன்.
அதுக்கப்புறம் நாலு தடவை போன்ல பேசினா. ஒரு தடவை நேர்ல பாத்து பேசுனோம். அத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு. கொஞ்ச நாள் லூசு மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் இங்க திருச்சிக்கு இப்போ வேலை பாக்கிற இந்த கம்பெனிக்கு மாறி வந்தேன். மூணு வருஷம் ஓடிடுச்சு. புள்ள குட்டியோட சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறேன்.’

‘சரி விடு மச்சி’ ரகுவின் தோளில் ஆதரவாய் தட்டினான்.

காலி பீர் பாட்டிலகள் ஓரமாய் ஒதுங்கி இருந்தது. வேந்தன் தரையில் படுத்தபடி ஓடுகிற ஃபேனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்துக்கு அறையே அமைதியாக இருந்தது.

‘பொன் மேனி.......ஹ்ஹா....உருகுதே,
என் ஆசை.......ஹ்ம்ம்.....பெகுகுதே’ வேந்தன் அடிக்குரலில் பாட ஆரம்பித்தான். ரகுவின் மனதில் அந்த படுக்கையறைக் காட்சி ‘ஈ’ மாதிரி மொய்த்துக் கொண்டே இருந்தது.

No comments: