நவீன வாழ்வின் 'செட்டில்'ஆதல் சம்பத் துக்கு வாய்க்காத நிலையிலேயே நோயால் மரணிக்கிறான். 'செட்டிலான 'அவனது மூன்று கல்லூரி நண்பர்கள் அவனது இறுதிச்சடங்கு வேலைகளைச் செய்கின்றனர். நண்பர்கள் மூவரும் சம்பத்துடன் உறவாடிய பொழுதுகளை நினைத்துப் பார்ப்பது போல் துண்டு துண்டான குறிப்புகளாக காலக்கிரமமின்றி எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.
திறன்கள் திறமைகள் இருந்தும் சம்பத்தால் ஏன் ஒரு சராசரியான பொருளாதார வாழ்க்கையைக்கூட அமைத்துக்கொள்ள முடியவில்லை. "பணம் சம்பாதித்தால் தான் உடலுறவு" என்பது வெட்கக்கேடானது என்கிறான் ஓரிடத்தில்.
சம்பத் ஒரு போராளியா? கலகக்காரனா? பொறுப்பற்றவனா?சிந்தனாவாதியா? எரிச்சலூட்டுபவனா? இன்னதென்று அவனை வகைப்படுத்த முடிவதே இல்லை.
கல்லூரிகளுக்கான இலக்கிய விழாவில் கம்பராமாயணத்தை எரித்த வழக்கில் கைதாகிறான்.
பின் திராவிட நாத்திக பேச்சாளனாக மேடைகளில் முழங்கினான்.
குடிபோதையில் மனதில் பட்டதை மேடையில் பேசி கட்சியில் இருந்து விரட்டப்பட்டான்.
மதுரையில் நட்டு போல்டு விற்பனை பிரதிநிதியாக இருந்தான்.
சிவகாசியில் கிறித்துவ போதனை நோட்டீஸ்கள் அச்சடிக்கும் ஜெசிந்தா அச்சகத்தில் வேலை பார்த்தான்.
அந்த சமயத்தில் வாராவாரம் நாமக்கல் சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கி எப்படியாவது பணம் சம்பாதிக்க முயற்சித்தான்.
அங்கே டெலிபோன் பூத்தில் பணிபுரிந்த ஜெயந்தியை மணமுடித்தான்.
சிவகாசி அச்சகத்தில் பணம் கையாடல் செய்து சென்னை சென்றான்.
கரும்புச்சாறு வியாபாரம் செய்யலாமா என்று கரும்புச்சாறு வியாபாரியிடம் ஆலோசனை கேட்கிறான்.
ஒரு பத்திரிக்கையில் புரூப் ரீடிங் வேலையில் சேர்ந்தான்.
கொலைக் குற்றங்களைப்படித்து பீதி அடைவதாகவும், தானே ஒரு கொலையாளி ஆகிவிடுவேன் என்று பயமாக இருப்பதாகவும் கூறினான்.
பின்னர் நாமக்கல் சென்று நர்சரி துவங்கி செடிகள் வளர்த்தான்.
பினாயில் தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்றான்.
"எவராலும் என்னை சாந்தப் படுத்த முடியவில்லை ஒருவேளை சாந்தப்படுவதை தான் விரும்பவில்லையோ என்னவோ", என்றும் "வாழ்க்கை தன்னை மூழ்கடித்துக் கொள்ளவே இல்லை ,தான் ஒரு தக்கையாக எப்போதும் மிதந்தபடியே இருக்கிறேன்" என்று தன் நண்பனுடன்
பேசியிருக்கிறான்.
நாவல் நெடுகிலும் வரும் சில மன வினோதங்கள் சிறப்பாகவும் பாசாங்கின்றியும் பதிவிடப்பட்டிருக்கின்றன.
அவைகளில் சில:
அழகர் வார்டுக்குள் நுழையும்போது சம்பத் இறந்து போயிருந்தான். அவன் மனைவி வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகி கட்டிலுக்கு அடியில் இருந்த இரண்டு டம்ளர்களை எடுத்து தூக்கு வாளிக்குள்போட்டு அழுத்தமாக மூடிக்கொண்டிருந்தாள்.
"பாரதியார் கவிதைகள் புத்தகம் வேண்டும். அவர பத்தி கல்லூரி விழாவில் பேச போறேன்" என்று வேறு டிபார்ட்மெண்டில் இருந்து வந்த ஒரு பெண் கேட்கிறாள். மறுநாளே லைப்ரரியில் தேடி கண்டுபிடித்து அவளிடம் சேர்க்கிறான் மாரியப்பன். அப்போதிலிருந்து அவள் தன்னுடைய ஆள் என்று தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறான். அவளிடம் காதல் கூறப்போகும் கணத்தையும், கடற்கரை மணலில் கைகோர்த்து நடப்பது போன்றும் கற்பனையில் உருவாக்கி களிக்கிறான்.
மாரியப்பனும் சம்பத்தும் இன்னொரு நண்பனின் ஊருக்குச் செல்கிறார்கள். இரவு நேரம். இளநீரில் ஓட்காவை அடைத்துப் பருகுகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்றபடி கெட்டவார்த்தைகளை சத்தமாக கத்தி மகிழ்கிறார்கள். நடுவே "ங்கொக்காள" என்று சம்பத் அந்த நண்பனை பார்த்து கத்த அவன் கோபம் கொண்டவனாக சம்பத்தை நோக்கி வந்து ஓங்கி அடிக்கிறான். சம்பத் அவனை பதிலுக்கு சரமாரியாக தாக்க துவங்குகிறான்.
_-----------------------------
செட்டில் ஆதல் என்கிற பருவத்தில் சிக்கலில் உழன்ற சகலரும் நெருக்கமாக உணரும் நாவல் இது.

