ரசவாதி (The Alchemist) நாவல் பற்றி
"இதயத்தின் பேச்சைக் கேளுங்கள்" என்கிறது புத்தகம். சரி, அதையும் தான் கேப்பமேன்னு கேட்டா, "அதெப்படி திமிங்கலம், இந்த புத்தகத்த 80 மொழிகள்ல மொழிபெயர்த்தாங்க? கோடி பேருக்கு மேல படிச்சாங்க? நமக்கென்னவோ விட்டலாச்சார்யா படம் பார்த்த ஃபீல் தான் கெடச்சது" அப்படிங்குது இதயம்.
இதயம் கிடக்குது. பார் போற்றும் இந்த நாவலில் அப்படி என்னதான் இருக்குது? "கனவைப் பின்தொடர்தல்", "பிறவி நோக்கத்தை அறிதல்", (ஏற்கனவே சொன்ன)"இதயம் பேசுவதைக் கேட்டல்" - இது போதாதா என்ன. நெஞ்சில் லட்சியச்சுடர் ஏற்றித் திரியும்/ லட்சியச்சுடர் ஏற்ற என்ன செய்யவேண்டுமென்று யோசித்துக் திரியும்/ ஏற்ற வேண்டுமா அல்லது ஏற்றத் தேவையில்லையா வென்று குழம்பித் திரியும் மக்கள் கொண்டாடுவதற்கு.
ஆடுகள் மேய்க்கும் நாடோடி இளைஞன், தனக்கு அடிக்கடி வரும் ஒரு குறிப்பிட்ட கனவிற்கான அர்த்தம் தேடி , குறி சொல்லும் குறத்தியை சந்திக்கிறான். பெரிய புதையல் அவனுக்கு கிடைக்கப்போவதாகச் சொல்கிறாள் குறத்தி. புதையலைத் தேடிப் புறப்படுகிறான். அந்தப் பயணமே கதை. இந்த 'லட்சிய'ப்பயணத்தின் ஊடாக, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் காதல், கொஞ்சம் மாயாஜாலம், கொஞ்சம் திகிலெனக் கலவையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.
லட்சியம், கனவு சரி. ஆனா, குறி கேக்குறது; சகுனங்களை அடையாளம் கண்டுக்குறது; பூவா, தலையா/ ஒத்தையா, ரெட்டையா , பாக்குற மாதிரியான உரிம்-துமிம் ங்கிற கற்களைப் பயன்படுத்துறது; "நீ ஒன்றை அடைய விரும்பினால், பிரபஞ்சமே உனக்காக காய்களை நகர்த்தத் துவங்கும்"னு 'நம்பிக்கை' ஏற்படுத்துறது- இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாத் தெரியுது.
இது தவிர காற்றோடு பேசுதல், சூரியனோடு பேசுதல், காற்றாகவே மாறுதல் போன்ற மாயாஜாலங்கள். உஷ்...ஷ்....ஷப்பப்பப்பா..........
நாவல்ல எனக்குப் பிடிச்ச ஒரே விசயம் என்னன்னா, கடவுள் கிட்ட பேசி காற்றாகவே தன்னை மாத்திக்கத் தெரிஞ்ச ஒரு நபர், புத்தர் மாதிரி ஞானியாகி , "ஆசையே துன்பத்திற்கு காரணம்" னு சொல்லிக்கிட்டு அமைதியா உட்காராம, பேராசை மந்திரவாதியா புதையலை எடுக்க புறப்படுகிறான். புதையலை எடுத்ததும் காதலியைப் பார்க்கக் கிளம்புறான். ஆன்மீகமும், லௌகீகமும் கூடிவாய்க்கப்பெற்ற வாழ்க்கைதான் நாவலாசிரியர் விரும்பும் லட்சியக் கனவோ என்னவோ.
செம்பை உருக்கி தங்கமாக்கும் ரசவாதத்தில திரவ நிலையில அமுதம்(Elixir of Life) கிடைக்குமா மே. இப்பதான் கேள்விப்படுறேன். எல்லா நோய்களுக்கும் மருந்தாம். முதுமை வராதாம். சாவில்லா வாழ்வு தருமாம். "பேசாம, ரசவாதி ஒருத்தன தேடிப் போ. இதுவே உன் பிறவி நோக்கம்" அப்படிங்குது இதயம். என்ன செய்ய??
ஆம...., தங்கலான் படம் இந்த நாவலின் தழுவலா?





