February 08, 2008

பார்வை விருந்து - சிறுகதை

சூரியப் பிரகாசத்தில் கதவில் ஊர்ந்து திரியும் வாலறுந்த பல்லியின்
கொல்லைப்புறத்தில் வைதேகியின் சப்தத்தில் மிதந்து போகும் புகை வளையத்தின்
ஊடாக கிளாவர் எட்டு, டயமண்ட் ஆறு சேர்த்து செய்த வெண்கலச் சிலையாய் நின்ற
வெண்ணெய் நிறப் பெண்ணின் திறந்த முதுகில் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சென்ற கேபிள் டிவிக்காரனின் முட்டியை உடைக்கனும்.

பயப்படாதீங்க. நம்ம கதாநாயகன் இன்னமும் தூக்கத்தில் இருந்து முழுமையாக
விடுபடவில்லை. விழிப்புக்கு முந்தைய நிலையில் (pre-conscious stage)
அவனின் சிந்தனையில் பிறந்த வார்த்தைகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.

- தொடர்கிறது-
- 'ஏங்க' வைதேகியின் குரல் அதட்டலாக உயர்ந்திருந்தது. 'இவ்ளோ நேரமாவா
தூங்குவீங்க, மணி 9 ஆகப் போகுது'
நம் கதாநாயகனின் பெயர் மணி அண்ணாச்சி. சிறு தொழில் அதிபர். அண்ணாச்சி கண் விழிக்கிறார். இன்று எதையோ சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவரின் கண்களில் தெரிகிறது. அவசரவசரமாக எழுந்து மேஜையைத் திறந்து பேப்பரும், பேனாவும் எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.

பெறுநர்
உதவி காவல் ஆய்வாளர் அவர்கள்,
டவுன் காவல் நிலையம்
சிவகாசி

மதிப்பிற்குரிய ஐயா,
நேற்று, என்னுடைய அலுவலக வேலை முடிந்து இரவு 11 மணிக்கு தான் வீடு திரும்பினேன். நேரப் போக்குக்காக அப்போது டிவியை ஆன் செய்தேன். அப்போது
டிவியில் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. அப்பட்டமான
படுக்கையறைக் காட்சிகள் கொண்ட நீலப் படத்தை கேபிள் டிவிக்காரர்கள்
ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஏதாகிலும் வீட்டில் குழந்தைகள் இதைப் பார்க்க நேர்ந்தால். நினைத்தாலே பீதி கிளம்புகிறது. நம்முடைய மரபான கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கேபிள் டிவிக்காரர்களின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த இழிவான செயலைச் செய்த விஷமிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
-மணி-
(உரிமையாளர் - டி.கே.எஸ். மேச் இன்டஸ்ட்ரீஸ்)

ஏட்டு கடிதத்தை வாங்கிப் படிக்கிறார்

- என்ன அண்ணாச்சி, நானும் தான் நேத்து அந்தப் படத்தைப் பாத்தேன். வாரம்
ஒரு நாள் தான் போடுறானுங்க. போட்டுட்டுப் போகட்டுமே
- சார், உங்களால நடவடிக்கை எடுக்க முடியுமான்னு மட்டும் சொல்லுங்க.
இல்லாட்டி மேலிடத்துக்கு போக வேண்டி வரும்
- வேண்டாம் அண்ணாச்சி, நீங்க அரசியல்வாதிங்க. எனக்கெதுக்கு வீண்
பொல்லாப்பு. கேபிள் டிவிக்காரன் எனக்கு தெரிஞ்சவன் தான். இனிமே இப்படி
படம் காட்டக் கூடாதுன்னு சொல்லிடுறேன். நடவடிக்கை எல்லாம் எதுக்கு?
- சரிங்க சார். அடுத்த வாரம் இந்த மாதிரி நடந்தா, அப்புறம் நான் வேற
மாதிரி தான் போக வேண்டி இருக்கும்.
- நான் பாத்துக்கிறேன் அண்ணாச்சி. ஆபிஸ் செலவுக்கு ஏதாச்சும் கொடுத்திட்டு போங்க.
அண்ணாச்சி சட்டைப் பைக்குள் கையை விட்டு 500 ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார்.

அண்ணாச்சியின் கடமையுணர்வு, கலாச்சாரப் பாதுகாப்புணர்வு பற்றி தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லையா. இல்லை, நீங்க தெரிய வேண்டியது இன்னமும் நிறைய இருக்கு.

அண்ணாச்சி, தன்னைத் தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டாலும், முதலில்
அவர் ஒரு வேட்டைக்காரர், இரண்டாவதாக ஒரு அரசியல்வாதி, மூன்றாவது தான்
தொழில். மது, மாது, சூது. கோரஸாக வரும் இந்த மூன்று வார்த்தைகளும் தான் ஒரு ஆணின் வீழ்ச்சிக்கு பெரிய காரணம்னு பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். மணி அண்ணாச்சிக்கு அந்த மூன்றாவது விஷயத்தின் மேல் தான் ஏகப் பிரியம். சீட்டு விளையாடப் போவதைத் தான் வேட்டைக்குப் போவதுன்னு சொல்வார். ஒரு சூதாடியின் கைகளை மணிக்கட்டோடு சேர்த்து வெட்டினாலும், காயம் ஆறிய பின் முழங்கையால் சீட்டு பிடித்து விளையாடுவான் என்பார்கள். நம்ம வேட்டைய ராஜாவும் அந்த கேஸ் தான்.

உள்ளூர் விளையாட்டில் 100, 200 வைத்து தான் விளையாடுவார்கள். வேட்டைய
ராஜா வாரம் ஒருமுறை வேட்டையாட மதுரைக்கு போவார். அங்கே ஆயிரங்களில்
விளையாடுகிறார்கள். எல்லாம் கள்ளத்தனமாக நடக்கிறது.

நேற்று இரவு 10 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. வேட்டைய ராஜாவுக்கு நேற்று
நல்ல அதிர்ஷ்டம். மூன்று கேம் வரிசையாக ஜெயித்தார். நடுவில் இயற்கை உபாதை அடிவயிற்றை முட்ட கழிப்பறைக்குச் சென்றவர் திரும்பி வந்த போது, அதுவரை
அத்தனை ஆட்டக்காரர்களும் ஊதித் தள்ளிய சிகரெட் புகை மட்டுமே அறையில்
இருந்தது.
இங்கே சக ஆட்டக்காரர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. சேகர்,
ஆனந்த், குருமூர்த்தி, செளந்திர பாண்டியன். நாலு பேருமே அண்ணாச்சிக்கு
தொழில் முறை நண்பர்கள். குருமூர்த்தி தவிர மற்ற அனைவரும் மணியைப் போலவே தீவிர சூதாடிகள். குருமூர்த்தி ஒரு குவாட்டர் முடியும் வரை
விளையாடிவிட்டு மல்லாக்கப் படுத்து விடுவார். இந்தக் கூட்டத்திலேயே
ஆனந்த் மட்டுமே இளையவர். வயது 52. மற்ற எல்லாருமே ரிட்டையர்டு கேசுகள்.
அறுபதாம் கல்யாணம் பார்த்தவர்கள்.

ஆட்களைத் தேடியபடியே மணி அண்ணாச்சி பக்கத்து அறைக்குள் பிரவேசித்தார்.
கனமான மவுனம் அங்கே நிலவியது. அத்தனை சூதாடிகளின் கண்களும் அங்கிருந்த
தொலைக்காட்சித் திரையில் குத்திட்டு நின்றன.

குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வருகிறாள் ஒரு வெள்ளைக்காரி. வெண்ணிற டவலைச் சுற்றியிருக்கிறாள். கட்டிலில் அமர்ந்திருக்கும் வெள்ளைக்காரனை
ஒரு காமப் பார்வை பார்க்கிறாள். இப்போது கேமரா, நாயகியின் பின்னால்
நின்றபடி நாயகனைப் பார்க்கிறது. டவல் நழுவுகிறது. நாயகியின் வெண்ணிற
முதுகுக்குள் கேமரா மூழ்குகிறது.

மணி அண்ணாச்சிக்கு எரிச்சல் அடி வயிற்றிலிருந்து கிளம்புகிறது. அண்ணாச்சி
போர்னோ படங்களுக்கு எதிரானவர் இல்லை என்ற போதிலும் சூதாடும்
சுவாரஸ்யத்தில் இருந்தவரின் மனம், அந்தப் படத்தை நாடாமல் சக
ஆட்டக்காரர்களின் மேல் கோபமாக வெளி வரக் காத்திருந்தது.

குருமூர்த்தி - 'இப்போ ஒரு மாசமா தான் போடுறானுங்களாம். அதுவும் வாரம்
ஒரு நாள் தானாம்'
சேகர் - 'அட, வெண்கலச் சிலை மாதிரி என்ன ஒரு அழகு. நம்ம ஊர்லயும் தான்
இருக்காளுங்களே'
குருமூர்த்தி - 'அப்படிச் சொல்லாதப்பா. நம்ம ஊரு பொண்ணுங்களும் முதல்ல
நல்லா தான் இருக்காளுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் மூணு பங்கா பெருத்துடுறாளுங்க'

மணி - 'யோவ், உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்ல. விளையாட வந்துட்டு இப்படி
வெக்கமில்லாம உக்காந்து படம் பாக்குறீங்களே. வாங்கப்பா எந்திரிச்சு'
சேகர் - 'பேசாம போ. படம் முடிஞ்சதும் தான் வருவோம். பெரிய இவன் மாதிரி
பேசுற. அசிங்கமாம்ல, அசிங்கம்'
மணி - 'கிழட்டுக் ******ளா' இந்த வசவைக் கடுமையாகப் பிரயோகித்தபின்
கையிலிருந்த சீட்டுக் கட்டை விசிறி அடிக்கிறார்.
மொத்த அறையும் சீட்டுகளால் நிறைகிறது. எல்லாருடைய முகத்திலும் பயமும்,
வெறுப்பும் கொப்பளிக்கிறது. மணி வெளியேறி இருந்தார். சூழ்நிலை கனமாக
இருந்தது. சீட்டுகள் அலங்கோலமாக்கியிருந்த அறையில் நீலப்படம் மட்டும்
வெறுமையாய் ஓடிக் கொண்டிருந்தது.

No comments: