February 21, 2015

கம்யூனிசம் என்பது பாட்டாளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் குரல்கொடுப்பது; சமத்துவம் பேசும் சித்தாந்தம் என்பதானதாக உங்கள் கருத்துக்கள் இருக்குமெனில் அதை மறுபரிசீலனைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் நிராகரிக்கப்படவும் வேண்டுமென உரத்துச் சொல்கிறது இந்த நூல். ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன். கிழக்கு பதிப்பகம்.
 ”மார்க்ஸியத்துடன் ஆக்கப்பூர்வமாக உரையாடவிரும்பியவர்கள், ஒன்று அழித்தொழிக்கப்பட்டார்கள், அல்லது பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள். பிறரோ தத்தமக்கு ஏற்றவகையில் அதனை மட்டற்ற அதிகாரத்துக்கான ஆயுதமாக மாற்றிக்கொண்டார்கள்”  என்று நூலாசிரியரின் கருத்து, புத்தகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிற கம்யூனிசவரலாற்றுடன் அவ்வளவு துல்லியமாய் பொருந்துகிறது.
சோவியத் ரஷ்யா உருவானது தொடங்கி லெனினும், ஸ்டாலினும் நிகழ்த்திய பல்வேறு மனிதத்தன்மையற்ற  பேரழிவுகளை புத்தகம் பேசுகிறது. கூட்டுப்பண்ணை என்கிற பெயரில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்பட்டதும், விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்குமாக செலவழித்ததையும், விவசாயிகள் பஞ்சத்தால் மடிந்துகொண்டிருக்க தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும், அரசியல் எதிரிகள், சித்தாந்த விரோதிகளை வதைமுகாம்களில் வதைத்ததும், கொன்றுகுவித்ததுமென விரிகிறது. லெனின் காலத்தில் செப்-1918 - ஜன1920 வரை மட்டும் 60,000 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்ததாம்.
அறிவியலைத் தங்கள் சித்தாந்தத்திற்கு ஏதுவாய் வளைப்பது. சித்தாந்தத்திற்கு எதிரான அறிவியல் கருத்துக்களை மோசடி என்றும், முதலாளித்துவ சதிகள் என்றும் முத்திரைகுத்தி விலக்குவது, அறிவியலாளர்களுக்கோ, கலைஞர்களுக்கோ  கருத்துசுதந்திரம் கடுகளவும் இல்லாத அலங்கோலம்.
ஸ்டாலின் கோரத்தாண்டவத்திற்கு ஒரு சிறிய உதாரணமாக கேய்டின் படுகொலையைச் சொல்லலாம். நாசி ஜெர்மனும், சோவியத்தும்  இணைந்து போலந்தைக் கைப்பற்றியபோது அரசியல் கைதிகளாகப்பிடிக்கப்பட்டவர்கள் சுமாராக 22000 பேர், (திருத்தவேமுடியாத வர்க்கஎதிரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு) ஒரே நாளில் கூட்டம்கூட்டமாகக் கொன்று கேட்டின் காடுகளில் புதைக்கப்பட்டனர்.
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
இதுதவிரவும் மாவோவின் கொடுங்கோன்மை, சீனப்பஞ்சம், க்யூபாவில் கம்யூனிசம் என்று தொடங்கி, இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் சுதந்திரத்துக்கு முன்ன்னும், பின்னும் ரஷ்யாவாலும், சீனாவாலும் இயக்கப்பட்டதையும், வெளிநாட்டு காம்ரேடுகளை வழிமொழிந்த வர்க்கப்பற்றையும், தொழிலுதவி என்கிற பெயரில் ரஷ்யா இந்தியாவில் நிகழ்த்திய சுரண்டல்களையும், கே.ஜி.பி என்கிற பெயரில் ரஷ்யாவின் உளவுஅமைப்பு இந்தியாவில் செயத லீலைகளையும் புத்தகம் விளாக்குகிறது. மார்க்சிஸ்டுகளான மாவோயிஸ்டுகள், உல்ஃபா தீவிரவாதிகளும் பழங்குடியினரின் சமூகபண்பாடுகளையும், ஆன்மீகமரபுகளையும் வேரறுத்துவருவதுவரைக்கும் சொல்லிச்செல்கிறார்.
’சே குவாரா’வை ஆதர்சநாயகனாகக் கொண்டொழுகி டீசர்ட்டுகளில் பதித்தலையும் இளையதலைமுறையினர் கம்யூனிசம் நிகழ்த்திய பேரழிவுகளைத் தெரிந்துகொள்ள அவசியம் படிக்கவேண்டிய நூல்.