
நூலின் பெயர் : ஒளவையின் உளவியல், ஃப்ராய்டு-லெக்கானின் மன அலசல்
ஆசிரியர் : ஐ.க. பாண்டியன்
வெளியீடு : கார்முகில் பதிப்பகம், மதுரை
உளவியல் பரிச்சயம் இல்லாதவர்கள் முன்னுரையைத் தவிர்த்து, நேராகக் கட்டுரைகளுக்குள் நுழைந்தால், பெரிய தள்ளாட்டம் மட்டுமே கிடைக்கும். மன அலசல்(psychoanalysis) பற்றிய அருமையான, எளிமையான முன்னுரையைத் தந்திருக்கிறார் 'செல்ல காமராசன் Ph.D.,' Dept of Psychiatry, Brooklyn university. முன்னுரை என்று கூட சொல்லாமல் முக்கிய உரை என்று கூட சொல்லலாம்.
முன்னுரையிலிருந்து
மனித மனம் மூன்று அங்கங்களாக இயங்குகிறது.
1) Id - அகநாடி - புலனின்பங்களை வலியுறுத்தும் மனம். எதிர்விளைவுகள் பற்றிய எந்த விதமான அக்கறையும் இல்லாதது. ஒரு சிறு குழந்தையைப் போல, தான் விரும்புவதெல்லாம் வேண்டும், வேண்டும் என்று கேட்கும் மனம்.
2) Super Ego - பேரகன் - தனக்குத் தெரிந்த அறநெறி, சமுதாய நெறிகளைத் தொடர்ந்து வலியுறுத்தும் மனம். அறிவுரைகளைத் தரும் முதியவன் இவன்.
3) Ego - அகன் - கற்றல், சிந்தித்தல், படைப்பாற்றல், திட்டமிடல், இது போன்ற பண்புகளை உருவாக்கும் மனம். குழந்தைக்கும், முதியவருக்கும் நடக்கும் சண்டைகளைத் தீர்த்து வைப்பது, முடிவுகளை எடுப்பது இவன் பொறுப்பு.
அகநாடி அதீதமானால் மன உச்சநிலை(mania) கொலை, கற்பழிப்பு, சமூகத்திற்கெதிரான செயல்களைச் செய்வதும், அகநாடி குறைந்தால் அதிதுக்கநிலை(depression) நாட்டமின்மை, ஆக்கமின்மை போன்றவைகளில் முடியும்.
பேரகன் முழு வளர்ச்சி அடைந்த நிலையில் (அகனையும், அகநாடியையும் கட்டுக்குள் கொணர்ந்து) ஒருபுறம் மனிதன் ஞானியாகவும், தன்னலமற்ற சமூக சேவகனாகவும் அல்லது இன்னொருபுறம் அடிப்படைவாதியாகவோ (fundamentalist) மூர்க்கமான கொடுங்கோலராகவோ மாறிவிடக் கூடும்.
அகன் வலிமையாகும் போது ஒருபுறம் மனிதன் படைப்புகள், சாதனைகள் செய்பனாகவும், மறுபுறம் பொருள் அதிகாரத்திற்கு ஆட்பட்டவனாகவும், ஊழல்வாதியாகவும், பொய் பேசும் சந்தர்ப்பவாதியாகவும் இருப்பான். அகன் குன்றும் போது அகநாடியின் விருப்பங்களுக்கோ, பேரகனின் கட்டு திட்டங்களுக்கோ இரையாகியும் மனச்சிதைவு (schizophrenia) நிலைக்கோ, 'வாழத் தெரியாத அப்பாவி' என்ற நிலைக்கோ இட்டுச் செல்லும்.
இந்தப் புத்தகத்தின் விருப்பம் என்ன?
செம்மையான வாழ்விற்கும், மேம்பட்ட உலகிற்குமான தன்னாய்வை (self analysis for better living & better world) பாரபட்சமின்றி பிரதிபலிப்பதின் மூலம், சமூகப் பொறுப்புள்ள மனிதனையும், மனிதாபிமானமுள்ள சமூகத்தையும் கட்டுவது.
மனித சிந்தனை ஓட்டங்கள் காலங்களால் மாறாத தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் ஔவையின் அறநெறிக் கருத்துக்களை, அவரின் உளவியல் பார்வையிலிருந்தும், நனவிலி நிலையிலிருந்து வந்த வார்த்தைகளை மன அலசலின் வாயிலாக ஆராய்கிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகம் யாருக்கு?
அகநாடியை மட்டுமே கொண்டு பிறக்கும் ஒரு குழந்தை, தன்னுடைய சுயமோகக் (narcissism) கட்டுகளில் இருந்து, அதன் அடுத்த நிலையான சமூகத் தன்னிலையாக்கத்திற்கு, அகன் மற்றும் பேரகனை வளர்க்க ஆரம்பிக்கும் பருவத்தில் அந்தக் குழந்தையின் மன வளர்ச்சியைச் சீரமைக்கும் கடமை உடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களே, இந்தப் புத்தகத்தின் முக்கிய இலக்குகள்.
ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம்
ஔவையின், 'இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர்' பாடல் பற்றி பேசும் போது ஆதிசங்கரரின் சாதிய மோகம் பற்றி பேசுகிறார்.
'அனைத்தும் ஒன்றே, அதுவே பரபிரம்மம்' என்று அத்வைதம் தந்த ஆதிசங்கரர், ஒருமுறை காசித் தெருவில் நடந்து வந்தபோது எதிரில் வந்த தாழ்ந்த குல மனிதனை, 'சண்டாளனே, போய் விடு' என்றாராம்.
அப்போது அவன் கேட்டானாம்.
'பொன் பாண்டத்திலும், மண் பாண்டத்திலும் உள்ள வெற்றிடத்தில் வேற்றுமை உள்ளதா? இந்த மகத்தான வேற்றுமை என்னும் மோகம் எங்கிருந்து வந்தது'
'எல்லாம் ஒன்றே' என்ற ஆதிசங்கரரின் கருத்து அவரின் நிலைப்பாடாக மட்டுமே இருந்திருக்கிறது. நனவிலி (unconscious) மனதில், அவருடைய சாதிய மோகத்தில் இருந்து விடுபடாதவராகவே இருந்திருக்கிறார்.
ஆதிசங்கரர், தன்னுடைய தவறை உணர்ந்து அந்த சண்டாளனையே தன்னுடைய குருவாக ஏற்றார்.
நனவிலி நிலையின் அப்பட்டமான, அம்மணமான வெளிப்பாடாக இந்த நிகழ்வைக் கருதலாம்.
என்னுடைய நனவிலி நிலையிலிருந்தும் வார்த்தைகள் வந்து விழுந்தபடியே இருப்பதால், மேற்கொண்டு எழுதுவதை நிறுத்துவதை உத்தமமாக நினைக்கிறேன்.
December 26, 2007
நூல் அறிமுகம்
December 25, 2007
குட்டிக் கதை
இரண்டாவது தெரு முக்கில், மளிகைக்கடையை ஒட்டி இருக்கும் மெட்ராஸூக்குக் கிளம்ப சணல் கயிற்றுப் பேருந்து தயாராக இருந்தது.
"எல்லாரும் ஏறியாச்சா. டிக்கெட்டுக்கு காச ரெடியா எடுத்து வைங்க"
-"டேய் மாணிக்கம், நானும் வண்டியில வாரேன்டா"
-"போடி, பொம்பளப் புள்ளய ஆட்டையில சேக்குறதில்ல"
-"டேய், ப்ளீஸ் டா, என்னயும் சேத்துக்கங்கடா"
-"உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா. போ, பேசாம"
-"ஆமா, பெரிய வண்டி வச்சிருக்கானுங்க, ஊர் உலகத்தில இல்லாத வண்டி. பத்தாயிரம் ரூவா வண்டி"
-"ஆமா. பெரிய வண்டி தான். எங்க வண்டி பத்தாயிரம் ரூவாய விடப் பெரிசு, லட்ச ரூவாய விடப் பெரிசு, கோடிய விடப் பெரிசு, பத்தாயிரம் கோடிய விடப் பெரிசு. ஏன், இந்த உலகத்தையே விடப் பெரிசு"
-"போலாம் ரைட்" கண்டக்டர் குரலுக்குப் பின் வண்டி நகர ஆரம்பித்தது.
December 13, 2007
வட்டச் சொந்தங்களும், நட்புக் கோடுகளும் - கவிதை
உருவகம் உவப்பானது
சொந்தங்களை வட்டங்களாக வளைத்தேன்
நட்புகளைக் கோடுகளாக நீட்டினேன்
வட்டங்களையும், கோடுகளையும் என் வழியே செலுத்தினேன்
அளவில் மாறுபட்டு, சிறிதும் பெரிதுமாய்
வட்டங்களும் கோடுகளும்
வட்டங்களின் பிணைப்புகள்
சில வலுவாகவும்
சில வலுவிழந்தும்
சில பிணைப்பு அறுபட்டும்
கோடுகளில்
சிலது ஆழ்ந்து ஊடுருவியும்
சிலது தொட்டும் தொடாமலும்
சில வட்டங்கள் கோடுகளாய் உருமாறியபடியும்
சில கோடுகள் வட்டங்களாய் உருமாறியபடியும்
சிலது நழுவிச் செல்கிறது
சிலது நெருங்கி வருகிறது
சிலது காணாமல் போகிறது
சிலது புதிதாய் முளைக்கிறது
மொத்தமாய் உருவி எடுத்து
காற்றில் மிதக்கவிட்டேன்
வெறுமையாய் நிற்கிறேன்
அவற்றின் ஊடுறுவல்களை
நிர்ப்பந்தம் இல்லாமல்
என்னுள் அனுமதிக்கின்றேன்
December 10, 2007
பெர்வர்ட் - சிறுகதை
பொதுவாகவே சம்பள நாள் என்றாலே ஒரு பரபரப்பு, எதிர்பார்ப்பு இருக்கும். எனக்கு கொஞ்சம் உதறலாக இருந்தது. இன்றையோடு இந்த ஆபிஸூக்கு முழுக்கு போட வேண்டும். சொல்லிவிட்டு நிற்பதா?, சொல்லாமலேயே நின்று விடுவதா? அது தான் இப்போதைய குழப்பம்.
சுமாராக ஒன்றே முக்கால் வருடத்தில் 5 அலுவலகங்களில் பணியாற்றிய பெரிய அனுபவஸ்தன் நான். இந்த ஆபிஸில் சேர்ந்து வாங்கப்போகும் முதலும் கடைசியுமான சம்பளத்திற்காகத்தான் வெயிட்டிங்.
'ஏன் வெளியேற வேண்டும்'னு கேட்கிறீர்களா. இந்த கிறுக்குப் பய கம்பெனியில மனுஷன் வேலை பார்ப்பானா.
"டேய்.. சும்மா நிப்பாட்றா.... உன் லட்சணம் தான் தெரியுதே. அடிக்கடி ஆபிஸ் மாறும் உனக்கு என்னடா யோக்கிதை இருக்கு, இப்படி பேச" அப்படின்னு தானே கேக்குறீங்க. இருங்க, மிச்சத்தையும் சொல்லி முடிச்சிடுறேன். அதுக்கப்புறம், உலகத்தில் இருக்கும் கெட்டவார்த்தையை எல்லாம் உபயோகப்படுத்தி, நீங்களே அந்தக் கிறுக்கனை அர்ச்சித்தாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
அடடா, இந்த நேரத்தில் இவள் எதுக்கு இங்கே வந்தாள். வந்தவள், சுசீலா. நான் இந்த ஆபிஸில் சேர்ந்த முதல் நாளில், லஞ்ச் நேரத்தில் என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு ஆபிஸை விட்டு வெளியேறியவள். இப்போ எதுக்கு வந்திருக்கிறாள். ஒருவேளை, சம்பளம் கொடுக்கிறேன் பேர்வழி ன்னு, இந்தப் பெரிசு தான் போன் பண்ணி வரச் சொல்லியிருக்கும்.
ஹாய், சொல்லிவிட்டு விசிட்டர் சேரில் அமர்ந்தாள். கேபினில் இருந்து அழைப்பு மணி ஒலி கேட்டது. உள்ளே சென்றேன். 'சுசீலாவ, உள்ள வரச் சொல்லுப்பா' தலையைக் கூட நிமிர்த்த நேரமில்லாத பெரிசு சொன்னது. 'சுசீலா... ஒரு பா...ர்சல்' என்று மனதுக்குள் சொல்லியபடி ஒரு சர்வர் மாதிரி வெளியே வந்தேன். சுசீலா கேபினுக்கிள் நுழைந்தாள். நான் என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.
சே..... நடுவில இந்த சுசீலா வந்து, நல்லா போய்க்கிட்டு இருந்த கதையை டிஸ்டர்ப் பண்ணிட்டாளே.
சரி. இது ஒரு கிறுக்குப் பய கம்பெனிங்கிறத முதல்ல உங்களுக்கு நிரூபிக்கணும், இல்லையா.
முதல் நாள், பெரிசு ஆபிஸூக்குள் நுழையும் போது, நான் என் மானிட்டரில் இருந்து கண்ணை விலக்கி, ரிவால்விங் சேரில் பின்புறமாக சுழன்று, "ஹலோ சார்" சொன்னேன்.
"உனக்கு புத்தி இருக்குதா. ஒரு பாஸ் கிட்ட இப்படி தான் மரியாதையில்லாம நடப்பியா. எந்திரிச்சு நின்னு 'குட் மார்னிங்' சொல்லனும், புரியுதா"
"சரி" என்றேன்.
அன்றைக்கு மதியான சாப்பாட்டு நேரத்தில் தான், சுசீலா என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அவள் சொன்ன வார்த்தைகள் அப்படியே என் காதுகளில் ஒலித்தபடியே இருக்கின்றன. சுசீலாவுக்கு என் வயது தான் இருக்கும்,22. பெரிசு அரை சதத்தைக் கடந்திருந்தது.
-"ஏன் வெளியேறப் போறீங்க"
- "இந்த பாஸ், கொஞ்சம் மோசம். அவருக்கு அக்கவுன்ட்ஸ் பாக்க ஆள் யாரும் தேவையில்ல. அவருக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணுமாம், அதுக்கு தான் என்னை அப்பாயிண்ட் பண்ணியிருக்கார். நான் சேர்ந்த முதல் நாளிலேயே இந்த விஷயத்தை என் கிட்ட சொன்னார்"
- "நீங்க சேர்ந்து எத்தனை நாள் ஆகுது"
-"அஞ்சு நாள் ஆகுது"
-"முதல் நாளே வெளியேறி இருந்திருக்கலாமே"
-"எனக்கு அவரோட வெளிப்படையான பேச்சு பிடிச்சிருந்தது. என்னோட பணத்தேவைகளையும் தீர்க்கிறேன்னு சொன்னாரு. ஆனால், பணத்துக்காக இல்லாட்டியும் அவரோட பேச்சுக்காக தான் இவ்ளோ நாள் வந்தேன்"
-"சரி, பிறகு இப்போ, எதுக்கு போறேன்னு சொல்றீங்க"
- "நான் செய்யுறது தப்போன்னு நினைக்கத் தோணுது"
-"அவர் உங்க கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரா?"
-"அப்படியெல்லாம் நடக்கல. பேசிக்கிட்டு இருப்பார். அவ்ளோ தான். சரி, நான் கிளம்புறேன்"
-"ஓகே"
சாயந்திரம் வந்த பெரிசு, இந்த விஷயத்தைக் கேட்டுட்டு, ரெண்டு நாள் மூஞ்சியத் தொங்கப் போட்டுக்கிட்டே அலைஞ்சது. ஏன் இப்படி அலையுதுகள்? காமக் காட்டுமிராண்டி. 'சே...சே.... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. காமம், காதல் இதெல்லாம் இயல்பானது, வயசு வித்தியாசம் இதெல்லாம் இதுக்கு கிடையாது' அப்படின்னு சொல்றீங்களா? அதுவும் உண்மையாக இருக்கலாம். சரி அதை விடுங்க. அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
ஒரு நாள் பெருசு கேபின்ல, டிவி ஓடிக்கிட்டு இருந்தது. அது டிவி இல்லை, CLOSED CIRCUIT TELEVISION ங்கிறது அப்போ தான் புரிஞ்சது. இந்த ஆபிஸ் பத்தி முதல்ல நீங்க புரிஞ்சிக்கனும். பெருசு கேபின். அப்புறம் நான் இருக்கும் அறை - ரிசப்ஷனா, வேலை பார்க்கும் இடமான்னு புரியாத ஒரு ரெண்டுங்கட்டான் இடம், வாசலில் நுழைந்தவுடன் ஏழு படி ஏறி நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வரவேண்டும். அதற்கு பக்கத்திலேயே ஏழு படி கீழே இறங்கிச் செல்லும். அந்த இடம் ஒரு குகை மாதிரி இருக்கும். அந்தக் குகைக்குள்ளே ஒரு நிம்மதியான இடம் இருந்தது. அது ஒரு சின்ன டாய்லெட். ஒரு ரெண்டு நிமிஷம் பெரிசு கண்ணிலிருந்து தப்புவதே பெரிய சொர்க்கமாக இருந்தது.
என் அறை, மற்றும் அந்தக் குகை இரண்டிலுமாகச் சேர்த்து ஏழு பேர் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் ஒருத்தன் மட்டும் தான் வேலை பார்க்கிறேன். வாழ்ந்து கெட்ட ஆபிஸ்.
என் அறையிலும், குகையிலும் ஒவ்வொரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஒருத்தனைக் கண்காணிக்க ரெண்டு கேமராவா?. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அந்த CCTV எப்போதும் இயங்கியபடியே தான் இருந்தது. டாய்லெட்டில் கேமரா இல்லை, என்பதை உறுதி செய்த பிறகே நிம்மதியாக இருந்தது.
அப்புறம் எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக ரெண்டு மணி நேரமாவது அட்வைஸ் மழை கிடைக்கும்.
"உன் வயசு என் அனுபவம்"
அப்ப எனக்கு ஒரு வயசு தான் ஆகுதுன்னு சொல்லனும்னு நினைப்பேன்.
சுசீலா உள்ளே போய் அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். உள்ளே என்ன நடக்குதுங்கிறதைப் பார்க்க நமக்கு ஒரு CCTV இருந்தா எப்படியிருக்கும்.
வெளியே வந்தாள். எனக்கு ஒரு BYE சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
அழைப்புமணி ஒலித்தது. இதைக் கண்டுபிடிச்சவனைச் செருப்பைக் கழட்டி அடித்தால் என்னவென்று தோன்றியது. உள்ளே நுழைந்தேன்.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத
மெல்லிய சப்தம் டேப்ரிக்கார்டர் வழியாக வழிந்து கொண்டிருந்தது. காயத்ரி மந்திரம் கேட்டால், சகல துன்பங்களும் நீங்குமாமே. நம்ம பெரிசுக்கு துன்பம் நீங்கின வழியைக் காணோம். தினமும் இதைக் கேட்டுக்கிட்டே தான் இருக்குது. தெரியாமல் தான் கேட்கிறேன். 24 மணி நேரமும், ஒரே மந்திரத்தைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. அதீத சகிப்புத்தன்மை கொண்ட ஞாநி ஆக இருக்க வேண்டும் அல்லது மழுங்கிய கூமுட்டையாக இருக்க வேண்டும்.
வேலையை விடப்போறேன்னு சொல்லவா? வேண்டாமா?. பெரிசு, பணத்தை இரண்டு முறை எண்ணிவிட்டு, என்னுடைய கண்ணுக்கு முன்னால் பணத்தை ஆட்டியபடி அட்வைஸூக்குள் நுழைந்து கொண்டிருந்தது. இது ஒரு கேவலமான டிரிக். நிறைய இடத்தில் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். பணம் கை மாறியது.
-"சார். இன்னையோட ஆபிஸிலிருந்து நிக்கப் போறேன்"
-"என்ன சொல்ற நீ. இதெல்லாம் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லனும். திடீர்னு நிக்கிறேன்னா, என்னப்பா அர்த்தம். பொறுப்பா இருக்கனும்பா. அந்தக் காலத்தில நான் ......................................................................................................................"
-"நிப்பாட்றா. பொம்பளப் பொறுக்கி"
வெளியேறி விட்டேன். தவறாகத்தான் பேசிவிட்டோமோ. மனசு கனமாக இருந்தது. பஸ் ஸ்டாப்பில் சுசீலா நின்று கொண்டிருக்கிறாள். அவளருகே சென்றேன். புன்னகைத்தாள்.
- "சம்பளம் கொடுத்தாரா?"
-"ஆமாம்"
ஐந்து நாள் வேலை பார்த்தவளுக்கு, கூப்பிட்டு அனுப்பி சம்பளம் கொடுக்கும் பெரிய உள்ளத்தை நீங்கள் வேறு எங்கேயும் பார்க்க முடியாது
-"நான் வேலையை விட்டு நின்னுட்டேன். எனக்குப் பிடிக்கல"
-"அப்படியா"
-"ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது"
-"ஆமாம். நிறைய பேசினார். அவர் கதையெல்லாம் சொன்னார்"
-"அப்படியா"
-"வெளியே வர்றதுக்கு முன்னாடி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்"
-".................."திக் கென்றது
-"உதட்டில்"
-".................." திக் திக் திக் திக். "அப்போ, நாளையிலிருந்து ஆபிஸூக்கு வருவீங்களா?" அவள் உதடுகளைப் பார்த்தபடியே கேட்டேன்
-"இல்ல, வரமாட்டேன். என் பஸ் வந்துடுச்சி. நான் கிளம்புறேன். நீங்களும் சீக்கிரமா, நல்ல வேலை தேடிக்கோங்க. bye"
-"bye"
பஸ் ஸ்டாப் பின்புறமிருந்த கட்டைச் சுவரில் உட்கார்ந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெரிசு பெர்வர்ட்டா? இல்லாட்டி இந்த சுசீலாவா? இல்லாட்டி நானா?
என்னடா, சிறுகதைன்னு நினைச்சுப் படிச்சா, இது புதிர் கதையால்ல இருக்குன்னு நினைக்கிறீங்களா? இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்க. தப்பான பதில் சொன்னா, உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்னு, விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சாபமெல்லாம் விட மாட்டேன். நீங்கள் எந்த பதில் சொன்னாலும், அது சரி தான். எதையாவது சொல்லுங்கள். அதுவரை, எதாகிலும் முருங்கை மரம் கிடைக்குமான்னு பார்க்கிறேன்.
December 09, 2007
தரிசனம் - சிறுகதை
போன முதல் நாளே பார்த்தேன் அந்த அற்புதத்தை. என் மிஷினுக்கு நேர் மேலே ஜன்னல். அந்த ஜன்னல் வழியாக எதிர்வீட்டு ஜன்னல். அதன் வழியாக அந்த அற்புத தரிசனம். தரிசனத்துக்கு சொந்தக்காரி கீதா. இரண்டாம் நாள் தரிசனத்தில் கொஞ்சம் புன்னகை இழைந்தது. அதற்கடுத்த இரண்டு வாரங்களும் தரிசன வாரங்களாகிப் போனது. asdf (space) ;lkj இதுக்கு மேல் தாண்டவே முடியவில்லை.
மூன்றாவது வாரத்தில் கிளாஸூக்கு வரும் வழியில் அந்தக் குறுகலான சந்தில் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது 'படபட' வென அடிக்க ஆரம்பித்தது. எதாகிலும் பேசலாமான்னு நினைச்சேன். என்னுடன் நினைப்பாக மட்டும் நின்று போனதை அவளால் ஜெயிக்க முடிந்தது. உன் பெயர் என்ன? என்றாள். சொன்னேன். 'ஏன் அப்படிப் பார்க்கிற' ன்னு கேட்டா. 'பார்க்கக் கூடாதா' ன்னேன். 'இன்னைக்கு காளியம்மன் கோவிலுக்கு சாயந்திரம் வருவேன்' னு சொல்லிட்டு, மாயமா மறைஞ்சுட்டா. ஆமா, அவள் வார்த்தைகளை மட்டுமே நான் பார்த்துக்கிட்டு நின்று கொண்டிருக்கும் போது, சூன்யத்தில் நழுவி விட்டிருந்தாள். (கொஞ்சம் ஓவராகத்தான் பேசுறேனோ. இதுக்கு தான் கண்ட இலக்கிய புக் எல்லாம் படிக்கக் கூடாதுன்னு சொல்றது) அவள் விலகிச் சென்ற மாயமே புரியவில்லை. சத்தியமா. அப்புறம் அன்னைக்கு கிளாஸைப் பத்தி கேக்கவே வேண்டாம்.
asdf ;lkj
asdf ;lkj
qwef polk
ASD ';LK
AWDF PLKJ
மாடு வாங்கி மேய்ச்சு பால் வியாபாரம் பண்ணலாம். நல்ல பிஸினஸ். அப்படின்னு Tutor சொன்னாரு.
திருவிழா, செவ்வாய், வெள்ளி தவிர்த்து கோவில் பெரும்பாலும் வெறுமையாகத்தான் இருக்கும். வேப்ப மரத்தடியில உட்கார்ந்திருந்தேன். தரிசனம், தரிசனத்திற்காக உள்ளே சென்றது. வெளியே வருவதற்கு 2 வாரமாவது ஆகியிருக்கும். நேராக என்னை நோக்கி தான் வந்தாள். இதயம் வெடித்து விட்டதா. இல்லை. 'உட்காரு' என்றேன். ஒரு புன்னகையைத் தந்தபடி எனக்கு எதிராக அமர்ந்தாள். ஏதேதோ பேசினோம். அதையெல்லாம் நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும். ம்கூம். சொல்லமாட்டேன். அது ரகசியம்.
அதற்குப் பின் ஜன்னல் தரிசனத்துடன் கோவில் உரையாடல்களுமாக நாட்கள் உவப்பாக நகர ஆரம்பித்தது.
'நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா', அவள் தான் கேட்டாள்.
புளியமரத்துடன் சிநேகித்தல்
புளியமரம் மொட்டையாய் இருக்கட்டும்
கல்லெடுத்து எறிய வேண்டும்
கிளையேறி உலுக்க வேண்டும்
பழம், பிஞ்சு, இலை, கொழுந்து
எல்லாமும் தின்ன வேண்டும்
புளியமரம் மொட்டையாய் இருக்கட்டும்
மொட்டை நல்லது
சிநேகம் நல்லது
December 06, 2007
மர்ஃபி விதி
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.
யாராவது, நமக்காக சேர்த்து வைத்திருந்தால் கூடப் போதும்.
