January 12, 2008

ஒரு தூக்கக் கலைவில்

ஏனோ வந்துவிடுகிறது
என்னறை வெளிச்சம்

எல்லாவற்றையும்
பார்வைக்கு கொணருவது மாதிரி

எங்கும் வெளிச்சம்
எல்லாம் வெளிச்சம்

இருட்டு மண்டியே கிடக்கிறது
உணர்ச்சிக்காத பார்வைகளில்

பார்வை பொய்

பூதமாய், சிரிப்பாய், சூன்யமாய் இருக்கிறது
என் சன்னல் விளாம்பழ மரம்

எங்கெங்கும் எங்கெங்கும்
ஒரு கனவு
அது பற்றிய சிந்தனை
ஒரு சிந்தனை
அது பற்றிய கனவு
இருட்டுலகத்தில்

January 05, 2008

சேரிடமறிந்து சேர்

இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு பைக்கை வீட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து கூச்சல். காளீஸ்வரி காலேஜ் பேருந்து. இருபாலரும் பயிலும் கல்லூரி தான். ஆனால் இந்தப் பேருந்தில் பெண்கள் மட்டும் செல்கிறார்கள். ஏதாகிலும் லோக்கல் விசிட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நேரத்தில் கல்லூரிப் பேருந்தைப் பார்க்க முடியாது. உள்ளே ஆசிரியர்களும் இல்லை போலிருந்தது. சப்தம் சாலையை நிறைத்தது.

அப்போது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் (ஆள் அட்டகாசமாக இருந்தாள்) மெல்லத் திரும்பி, ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் ஒரு குறும்பு சிரிப்பு. பிறகு மெதுவாகக் கையை ஆட்டினாள், என்னை நோக்கி. 'ஆஹா...பரவாயில்ல. நம்ம ஊரு (சிவகாசி) பொண்ணுங்க கூட தேரீட்டாங்க' ன்னு நினைச்சு, நானும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கை அசைத்தேன்.

இந்த இடத்தில சிவகாசி ஊர், கலாச்சாரக் காவலர்களைப் பத்தி நீங்க கொஞ்சம் தெரிஞ்சிக்கனும். மற்ற பள்ளிகள், பெண்களைச் சுரிதாருக்கு மாற்றி இருந்த போதும், நான் படித்த பள்ளி இன்னமும் தாவணிக் கனவில் இருந்து விடுபடாமலேயே இருக்கிறது. இதில் என்ன இருக்கிறது, என்கிறீர்களா?. இருக்கிறது. இத்துனூண்டு இடுப்பு தெரிந்தாலே, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிடுவார்கள் கலாச்சாரக் காவலர்கள். இடுப்பை மறைக்க பெண்கள் படும் பாட்டை நினைத்தாலே பாவமாயிருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெண்களின் கை இடுப்பிலேயே மையம் கொண்டிருப்பதை எங்கள் பள்ளியில் பார்க்கலாம்.

இது பரவாயில்லை. வருடத்தின் முதல் பாடநாளில் பிரேயர் முடிந்தவுடன், பசங்க மட்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவோம். பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பிரேயர் நடக்கும். தங்களின் உடை விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய கவனம் பற்றியதும், பையன்களிடம் பேசாமல் இருந்து தங்களின் நெறி வழுவாமல் காத்துக் கொள்வதும், தங்களின் பெற்றோரின் நன்மதிப்பிற்கு களங்கம் விளைவிக்காததும் பற்றியதும் தான் அந்த ஸ்பெஷல் பிரேயர் என்று எந்தப் பெண்ணும் எங்களிடம் சொன்னதில்லை. நாங்களாக யூகித்தது. 200% சரியான யூகம் தான்.

என் நண்பர் ஒருவர் சிவகாசியில் உள்ள மற்றொரு கல்லூரியில் படித்தவர். PHYSICS LAB போகும் வழியில் தான் பெண்கள் அறை இருக்குமாம். ஒரு பையன் அந்த இடத்தைக் கடக்கும் போது, தலையைக் குனிந்தபடியே தான் செல்ல வேண்டுமாம்.
வகுப்பறையில் முன் வரிசைகளில் ஆண்களும், பின் வரிசையில் பெண்களும் உட்கார வேண்டுமாம். ஆண்கள் பின்னால் உட்கார்ந்தால், முன்னால் இருக்கும் பெண்களின் முதுகைப் பார்ப்பானுங்களாம்.
கல்லூரியில் மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்தது, தெரியவந்தால் ஃபைன் கட்ட வேண்டுமாம். அதுவும் இலை பிடுங்கியவனின் தகப்பனார் வந்து கட்ட வேண்டும்.

சரி, இப்போது நிகழ் காலத்துக்கு வருவோம்.
காலையில் வழக்கமாக இதே பேருந்தில் 'உம்மன்னா' மூஞ்சிகளாகப் போகும், அதே பெண்கள் தானா இவர்கள்? கலாச்சாரக் காவலர்களின் தலையில் ஓங்கிக் குட்டியது மாதிரி இருந்தது அந்தப் பெண்ணின் கையசைப்பு.

அந்த 'அட்டகாசம்' கை அசைத்த நேரத்தில், அவளைச் சுற்றி ஒரு கூட்டமே கூடி இருந்தது. இப்போது நிறைய கைகள். அதில் ஒரு கை, என் முகவாய்க்கட்டையை உடைப்பேன் என்றது. கைக்கு சொந்தக்காரியின் நாக்கும், கண்களும் வெளித் தள்ளியபடி ஆனால் ஆக்ரோஷமில்லாமல் இருந்தது. எனக்கு சுரீர் என்றது. வண்டியை வேகமெடுத்து பேருந்தை முந்திச் சென்றேன். முந்தும் போது ஓ! என்று பெருங்கூச்சல்.

இப்போது தலைப்புக்கு வருவோம்.

சேரிடமறிந்து சேர் - ஆத்திச் சூடி
"அடடா. ஏதோ அட்வைஸ் ஆரம்பிக்கப் போறான்டா" ன்னு பயப்படாதீங்க.

போன பதிவில் சொன்ன புத்தகம் "
ஒளவையின் உளவியல், ஃப்ராய்டு லெக்கானின் மன அலச" லில் 'சேரிடமறிந்து சேர்' பற்றி ஆசிரியர் ஐ.க.பாண்டியன் கூறுவது:
"சேரும் இடம் சரியானதாக இல்லையென்றால், ஒருவன் வல்லவனாகவோ, நல்லவனாகவோ இருந்து மட்டும் பிரயோஜனமில்லை. அவன் அந்தச் சூழலுக்குள் தொலைந்து, அந்தக் குழுவின் கருத்துக்களையே தன்னுடைய கருத்தாக எண்ணும் அபாயமும் நேரலாம்".

ஒரு குழுவாக இயங்கும் போது, தனிமனிதனிடம் உண்டாகும் கூட்டுப் பிரக்ஞை (COLLECTIVE CONSCIOUSNESS), பயமின்மை (LACK OF FEAR) பற்றி ஃப்ராய்டு கூறுவது: "குழுவின் எல்லை மீறிய விழுமியங்களால் (TRANSCENDING) தனியனின் சொந்த, தனிப்பட்ட ஆளுமையும், தற்காதலும் (NARCISSISM) நிர்மூலமாக்கப்படுவதால் இந்தப் பயமின்மை உருவாகிறது".

குழுவுக்குள் இயங்கும் தனியனின் ஆற்றல்களோ, அபத்தங்களோ அளவிட முடியாததாய் இருக்கிறது. இதே மாதிரியாக குழுக்களுக்குள் என்னைத் தொலைத்த கணங்களையும், குழுவின் மொழியான சிறு சேட்டைகளைச் செய்ததையும், கூச்சலிட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.