December 26, 2007

நூல் அறிமுகம்



நூலின் பெயர் : ஒளவையின் உளவியல், ஃப்ராய்டு-லெக்கானின் மன அலசல்
ஆசிரியர் : ஐ.க. பாண்டியன்
வெளியீடு : கார்முகில் பதிப்பகம், மதுரை

உளவியல் பரிச்சயம் இல்லாதவர்கள் முன்னுரையைத் தவிர்த்து, நேராகக் கட்டுரைகளுக்குள் நுழைந்தால், பெரிய தள்ளாட்டம் மட்டுமே கிடைக்கும். மன அலசல்(psychoanalysis) பற்றிய அருமையான, எளிமையான முன்னுரையைத் தந்திருக்கிறார் 'செல்ல காமராசன் Ph.D.,' Dept of Psychiatry, Brooklyn university. முன்னுரை என்று கூட சொல்லாமல் முக்கிய உரை என்று கூட சொல்லலாம்.

முன்னுரையிலிருந்து
மனித மனம் மூன்று அங்கங்களாக இயங்குகிறது.

1) Id - அகநாடி - புலனின்பங்களை வலியுறுத்தும் மனம். எதிர்விளைவுகள் பற்றிய எந்த விதமான அக்கறையும் இல்லாதது. ஒரு சிறு குழந்தையைப் போல, தான் விரும்புவதெல்லாம் வேண்டும், வேண்டும் என்று கேட்கும் மனம்.

2) Super Ego - பேரகன் - தனக்குத் தெரிந்த அறநெறி, சமுதாய நெறிகளைத் தொடர்ந்து வலியுறுத்தும் மனம். அறிவுரைகளைத் தரும் முதியவன் இவன்.

3) Ego - அகன் - கற்றல், சிந்தித்தல், படைப்பாற்றல், திட்டமிடல், இது போன்ற பண்புகளை உருவாக்கும் மனம். குழந்தைக்கும், முதியவருக்கும் நடக்கும் சண்டைகளைத் தீர்த்து வைப்பது, முடிவுகளை எடுப்பது இவன் பொறுப்பு.

அகநாடி அதீதமானால் மன உச்சநிலை(mania) கொலை, கற்பழிப்பு, சமூகத்திற்கெதிரான செயல்களைச் செய்வதும், அகநாடி குறைந்தால் அதிதுக்கநிலை(depression) நாட்டமின்மை, ஆக்கமின்மை போன்றவைகளில் முடியும்.

பேரகன் முழு வளர்ச்சி அடைந்த நிலையில் (அகனையும், அகநாடியையும் கட்டுக்குள் கொணர்ந்து) ஒருபுறம் மனிதன் ஞானியாகவும், தன்னலமற்ற சமூக சேவகனாகவும் அல்லது இன்னொருபுறம் அடிப்படைவாதியாகவோ (fundamentalist) மூர்க்கமான கொடுங்கோலராகவோ மாறிவிடக் கூடும்.

அகன் வலிமையாகும் போது ஒருபுறம் மனிதன் படைப்புகள், சாதனைகள் செய்பனாகவும், மறுபுறம் பொருள் அதிகாரத்திற்கு ஆட்பட்டவனாகவும், ஊழல்வாதியாகவும், பொய் பேசும் சந்தர்ப்பவாதியாகவும் இருப்பான். அகன் குன்றும் போது அகநாடியின் விருப்பங்களுக்கோ, பேரகனின் கட்டு திட்டங்களுக்கோ இரையாகியும் மனச்சிதைவு (schizophrenia) நிலைக்கோ, 'வாழத் தெரியாத அப்பாவி' என்ற நிலைக்கோ இட்டுச் செல்லும்.

இந்தப் புத்தகத்தின் விருப்பம் என்ன?
செம்மையான வாழ்விற்கும், மேம்பட்ட உலகிற்குமான தன்னாய்வை (self analysis for better living & better world) பாரபட்சமின்றி பிரதிபலிப்பதின் மூலம், சமூகப் பொறுப்புள்ள மனிதனையும், மனிதாபிமானமுள்ள சமூகத்தையும் கட்டுவது.
மனித சிந்தனை ஓட்டங்கள் காலங்களால் மாறாத தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் ஔவையின் அறநெறிக் கருத்துக்களை, அவரின் உளவியல் பார்வையிலிருந்தும், நனவிலி நிலையிலிருந்து வந்த வார்த்தைகளை மன அலசலின் வாயிலாக ஆராய்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் யாருக்கு?
அகநாடியை மட்டுமே கொண்டு பிறக்கும் ஒரு குழந்தை, தன்னுடைய சுயமோகக் (narcissism) கட்டுகளில் இருந்து, அதன் அடுத்த நிலையான சமூகத் தன்னிலையாக்கத்திற்கு, அகன் மற்றும் பேரகனை வளர்க்க ஆரம்பிக்கும் பருவத்தில் அந்தக் குழந்தையின் மன வளர்ச்சியைச் சீரமைக்கும் கடமை உடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களே, இந்தப் புத்தகத்தின் முக்கிய இலக்குகள்.

ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம்

ஔவையின், 'இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர்' பாடல் பற்றி பேசும் போது ஆதிசங்கரரின் சாதிய மோகம் பற்றி பேசுகிறார்.

'அனைத்தும் ஒன்றே, அதுவே பரபிரம்மம்' என்று அத்வைதம் தந்த ஆதிசங்கரர், ஒருமுறை காசித் தெருவில் நடந்து வந்தபோது எதிரில் வந்த தாழ்ந்த குல மனிதனை, 'சண்டாளனே, போய் விடு' என்றாராம்.
அப்போது அவன் கேட்டானாம்.
'பொன் பாண்டத்திலும், மண் பாண்டத்திலும் உள்ள வெற்றிடத்தில் வேற்றுமை உள்ளதா? இந்த மகத்தான வேற்றுமை என்னும் மோகம் எங்கிருந்து வந்தது'

'எல்லாம் ஒன்றே' என்ற ஆதிசங்கரரின் கருத்து அவரின் நிலைப்பாடாக மட்டுமே இருந்திருக்கிறது. நனவிலி (unconscious) மனதில், அவருடைய சாதிய மோகத்தில் இருந்து விடுபடாதவராகவே இருந்திருக்கிறார்.
ஆதிசங்கரர், தன்னுடைய தவறை உணர்ந்து அந்த சண்டாளனையே தன்னுடைய குருவாக ஏற்றார்.
நனவிலி நிலையின் அப்பட்டமான, அம்மணமான வெளிப்பாடாக இந்த நிகழ்வைக் கருதலாம்.

என்னுடைய நனவிலி நிலையிலிருந்தும் வார்த்தைகள் வந்து விழுந்தபடியே இருப்பதால், மேற்கொண்டு எழுதுவதை நிறுத்துவதை உத்தமமாக நினைக்கிறேன்.

2 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு...

இந்த நூலை நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக உளவியலில் எனக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் அறிமுகம் நன்றாக உள்ளது. யதேச்சையாகத்தான் உங்கள் பதிவிற்கு வந்தேன். இந்த புத்தகம் தந்த ஆர்வத்தில் திருக்குறளை ஆய்வு செய்யும் நோக்கில் வாங்கி வைத்துள்ளேன் அதன் எல்லா மரபாசிரியர் உரைகளுடன். காலம்தான் சாதகமாக இல்லை.

உங்களது அறிமுகம் சுருக்கமாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

சிவக்குமார் said...

ஜமாலன் அவர்களே,
உங்களுடைய உடல் அரசியல் வலைப்பூவைப் படித்து வருகிறேன். சொற்பிரயோகங்கள் புதிதாகவும்,கடினமாகவும் இருப்பதால் மெதுவாக வாசித்தபடி இருக்கிறேன். உங்களின் வருகைக்கு நன்றி.
நீங்கள் வாழ்த்தும் அளவுக்கு பெரிதாக அருகதை ஏதும் எனக்கு இல்லை. ஆனால் அருகதையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது.