December 13, 2007

வட்டச் சொந்தங்களும், நட்புக் கோடுகளும் - கவிதை

உருவகம் உவப்பானது

சொந்தங்களை வட்டங்களாக வளைத்தேன்
நட்புகளைக் கோடுகளாக நீட்டினேன்
வட்டங்களையும், கோடுகளையும் என் வழியே செலுத்தினேன்

அளவில் மாறுபட்டு, சிறிதும் பெரிதுமாய்
வட்டங்களும் கோடுகளும்

வட்டங்களின் பிணைப்புகள்
சில வலுவாகவும்
சில வலுவிழந்தும்
சில பிணைப்பு அறுபட்டும்

கோடுகளில்
சிலது ஆழ்ந்து ஊடுருவியும்
சிலது தொட்டும் தொடாமலும்

சில வட்டங்கள் கோடுகளாய் உருமாறியபடியும்
சில கோடுகள் வட்டங்களாய் உருமாறியபடியும்

சிலது நழுவிச் செல்கிறது
சிலது நெருங்கி வருகிறது
சிலது காணாமல் போகிறது
சிலது புதிதாய் முளைக்கிறது

மொத்தமாய் உருவி எடுத்து
காற்றில் மிதக்கவிட்டேன்

வெறுமையாய் நிற்கிறேன்

அவற்றின் ஊடுறுவல்களை
நிர்ப்பந்தம் இல்லாமல்
என்னுள் அனுமதிக்கின்றேன்

1 comment:

Anonymous said...

முரண்பாடுகள் இல்லாமல் தெளிவாய் ஒரு கவிதை உன்னிடமிருந்து!!!
நன்றாக உள்ளது...பாராட்டுக்கள்!!!