June 15, 2010

இலக்கியச் சந்திப்பு- சிவகாசி

23/03/2008 - ஞாயிறு 9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்னு நிகழ்ச்சி நிரலில் சொல்லி இருந்தாங்க. ரொம்ப லேட்டாயிடுச்சேன்னு நினைத்தபடி செமினார் ஹாலில் நான் நுழைந்த போது மணி 9:20. எனக்கு முன்னாடி ரெண்டே பேர் வந்திருந்தாங்க. அதுக்கப்புறம் ஒன்னரை மணி நேரத்துக்கு நான் எப்படி பொழுது போக்கினேன்னு சொன்னா சிரிப்பீங்க. ஃபால்ஸ் சீலிங்கில் (பொய்க் கூரை) இருந்த ஸ்பாட் லைட்டுகளை எண்ணிக் கொண்டு இருந்தேன். அது போரடிக்கவே, எத்தனை இருக்கைகள் இருக்குதுன்னு எண்ணி பார்த்தேன். முதல் வரிசையில் 9. மொத்தம் 6 வரிசைகள். கடைசியாக 4 நாற்காலிகள் தனியாகக் கிடந்தன. ஆக மொத்தம் 58. பெருக்கல் கணக்கு தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் பொழுது போயிருக்குமேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன். சரி அதனால என்ன, இன்னொரு வாட்டி ஒவ்வொண்ணா எண்ண ஆரம்பிச்சேன். ஒன்னு, ரெண்டு,.......அம்பத்தெட்டு. சரியா தான் இருக்கு.
நடுவில கொஞ்ச நேரம் போரடிக்கவே, செமினார் ஹாலை விட்டு வெளியேறி ஹோட்டல் லாபியில் போய் உட்கார்ந்தேன். திலகபாமா வந்தாங்க. அறிமுகப்படுத்திக்கிட்டேன். 'ஓ, அந்தப் பட்டாசா?'ன்னு கேட்டாங்க. 'ஹிஹி'ன்னு அசடு வழிஞ்சேன். அப்புறம் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. திலகபாமா ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணி நிகழ்ச்சிக்கு ஆள் திரட்டிக்கிட்டு இருந்தாங்க. நிகழ்ச்சி சரியா 10:40க்கு ஆரம்பிச்சது.

வைகைச் செல்வியின் கவிதைத் தொகுப்பை விமர்சிக்க பொன்னீலன், 'கவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள்' – கவிதைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு பற்றி பேச பிரபஞ்சன், பா.வெங்கடேசன், ஏற்புரை வழங்க அமிர்தம் சூர்யா, தொகுப்பாளர் திலகபாமா. இவங்க யாரைப் பத்தியும் எனக்கு பெரிசா தெரியாது. இவங்க படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. என்னுடைய கவனிப்புகளிலிருந்து தோன்றியதை இங்கே பகிர்கிறேன்.

பொருமலுடன் திலகபாமா

தொகுத்து வழங்கலின் ஊடாக திலகபாமா பேசியதில் கவனித்தது. பெண்கள் இலக்கிய உலகுக்கு வர ஊக்கம் தரப்பட வேண்டும். சிவகாசியில் மேல்தட்டு பெண்களின் வாழ்க்கையும் கதவுகளுக்குப் பின்னால் அவலமாகவே இருக்கிறது என்றார். பேசும் போது அடிக்கடி "எங்களுடைய" என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்தார். அது பெண்கள் என்கிற அர்த்தத்திலா அல்லது எழுத்தாளர்கள் என்கிற அர்த்தத்திலா என்று புரியவே இல்லை. ஒரு இடத்தில் "கவிதையைப் பற்றிய ஆந்த கண்ணோட்டத்தையும்" என்றார். பேட்ஸ் ஐ வியூவைச் சொல்கிறாரோனு நினைச்சேன். ரெண்டாவது வாட்டி அதே வார்த்தையைப் பிரயோகித்த போது தான் புரிந்தது, அது "ஆழ்ந்த கண்ணோட்டம்" என்று :) பெண்கள் சம்மந்தப்படாத வேறு விசயங்களைப் பற்றி அவங்களால் பேச முடியாதோன்னு சின்ன சந்தேகமே வந்தது. எல்லாம் பேசிட்டு 'நான் பேசுறது பெண்ணியம் இல்லை' ன்னு கடைசியா சொல்லி தப்பிச்சிக்கிடுறாங்க. ஒரு விசயம் தெளிவாகப் புரிஞ்சது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் திலகபாமா அவர்களின் அன்பு வேண்டுகோளுக்காக வந்தவர்கள் என்பது.

ஜாலியாக பொன்னீலன்

பட்டிமன்றப் பேச்சு மாதிரி இருந்தது இவருடைய பேச்சு. நாகர்கோவில் தமிழ். வைகைச் செல்வியின் கவிதைத் தொகுப்பு பற்றிய இவருடைய விமர்சனத்தைத் தவிர்த்து இவர் பேசிய மற்ற விசயங்கள் படு சுவாரஸ்யம். புதிதாக அறிமுகமாகும் எழுத்தாளர்களை தடியெடுத்து மிரட்டாதீர்கள். ஊக்கம் கொடுங்கள். அவர்களும் பின்னாளில் நல்ல படைப்புகள் தருவார்கள், என்றார். விவேகானந்தரைப் பற்றி புளகாங்கிதாமாகக் கூட எழுத்தாளர்கள் பேசுவார்கள் என்று இவர் பேச்சைக் கேட்ட பிறகு புரிந்தது. எனக்கு விவேகானந்தர் மேல் பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை.

ரூம் போட்டு யோசிக்கும் பா.வெங்கடேசன்
குருந்தாடியோடு வந்திருந்த இளைஞர். மேடையில் அமர்ந்திருந்தபோது பாதி நேரம் விட்டத்தை நோக்கியும், மீதி நேரம் தரையை நோக்கியும் தலையைத் திருப்பி வைத்திருந்தார். எல்லா நேரமும் கண்கள் மூடியே இருந்தது. என்னடா, இந்த மனுசன் மேடையிலேயே இப்படி தூங்குறாரேன்னு நினைச்சேன். அப்புறம் தான் புரிஞ்சது, தலைவர் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டு இருந்தாருன்னு. இவரோட விமர்சன பாணி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. "வைகைச்செல்விக்கு கவிதையே எழுதத் தெரியாது" "இந்த புத்தகத்தில் இருப்பதில் பாதி கட்டுரைகள் தேறாது" "சூரியன் தெற்கே உதிக்காது" இது மாதிரி. வைகைச்செல்வியின் ஒரு குறிப்பிட்ட கவிதை பற்றிய அவருடைய புரிதலைச் சொன்ன போது தான், அவர் ரூம் போட்டு யோசிக்கும் 'ஸ்ட்ரக்சுரலிச கொடுக்கு' (சாரு பாஷையில்) என்று புரிந்தது. அதில் ஒரு வரி, "குளிரிலும், வெயிலிலும் சொட்டும் நேசம்" (சரியான வார்த்தை நினைவில்லை). இதற்கு ரூம் போடுபவர் சொன்ன விளக்கம்: "வெயிலில் சொட்டுவது எது? வியர்வை. வியர்வை என்பது பாலின்பத்தின் அடையாளம்". அடப்போங்கப்பா என்றிருந்தது. கவிதையை விமர்சிக்க கணித முறையிலான அளவீடுகள் வர வேண்டும். புதிய விமர்சன தளங்கள் கட்டமைக்கப்பட வேண்டும், என்றார்.

பொறுப்புடன் பிரபஞ்சன்

"பிரதியை வாசகன் பெற்றுக் கொண்டதும் ஆசிரியன் இறந்து விடுகிறான். பிரதியை தன் சூழலுக்கு ஏற்றவாறு படிக்கும் சுதந்திரத்தை வாசகன் அனுபவிக்கிறான்' என்று பின் நவீனத்துவம் பேசினார்." "கவிதை ஏன் புரியாமல் போகிறது? எந்தக் கவிஞனும் இருண்மையான கவிதை எழுத விரும்புவதில்லை. அவன் எல்லா வழிகளையும் அடைத்து விடுவதில்லை. சாவியை கண்ணில் தெரியும்படியாக எங்காவது வைத்திருப்பான். வாசகனிடம் கவனமும், பொறுமையும் கோரி நிற்கிறது புரியாத கவிதைகள். வாசகனும் வாசிப்பதின் மேன்மை நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார். ஆனால் எனக்கென்னவோ இங்கே படைப்பாளிகள் மட்டும் தான் வாசகர்களாகவும் இருக்கிறார்களோன்னு நினைக்கத் தோணுது.
எளிய வரிகளில் கூட சிறந்த கவிதை எழுத முடியும் என்று ஒரு உதாரணத்துடன் சொன்னார்.
'பறக்கும் பறவையில் பறக்கத் தெரியாத பறவை எது?'
இதில் என்ன கவித்துவம் இருக்குது? புரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க.

உணர்ச்சி வேகத்தில் அமிர்தம் சூர்யா

இவரும் ஒரு குருந்தாடி இளைஞர். ஏற்புரை வழங்க வந்தார். 'ஆர்ம்பத்ல நாங்க எப்டி இருந்தோம், இப்பம் எத்தெ எத்தெ அல்லாம் கட்ந்து இந்த எட்துக்கு வந்த்ருக்கோம்' இந்த மாதிரி ஆரம்பிச்சு கோர்வையாகவோ, கோர்வையில்லாமலோ பேசிக்கினே இர்ந்தாரு. அவர் தொகுத்து அளித்திருந்த 'கவிதையில் படரும் மிளகுக் கொடிகள்' – கட்டுரைத் தொகுப்புக்கு முன்னட்டை வடிவமைத்த நபரைப் பற்றி பேசிப் புளகாங்கிதமடைந்து கொண்டிருந்தார். ஓவியருக்கு பாதிக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்துக் காட்டிய பிறகே அவர் வரைந்த ஓவியத்தை அட்டையில் போட்டிருக்கிறார்கள். அதில் நெருப்புக் கோழி மாதிரியான ஒரு பறவை நின்று கொண்டிருக்கிறது. அதன் கால்கள் வேர்களாகி தரையை இறுகப் பற்றி இருக்கிறது. அதன் தலை இறக்கைகளுடன் ஒரு பறவை போல வடிவமைக்கப் பட்டிருந்தது. வானத்தில் அதன் சுதந்திரம் அனுபவித்தாலும் அதன் வேர்கள் தரையில் ஊன்றி இருக்கிறது, என்றார். எனகென்னவோ ரொம்ப குறுகலான சிந்தனை மாதிரி தெரிந்தது. தவிரவும், கவிதை பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கு எதுக்கு இது மாதிரி படம்?

இது போக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் ஒருத்தர் வந்து யாரோ எழுதிய ஒரு கவிதையை ஆவேசமாக படித்தார்.

"காதை ரொப்பிக்கிடு வரச் சொன்ன
கழுத்த ரொப்பிக்கிட்டு வரச் சொன்ன
காலை ரொப்பிக்கிட்டு வரச் சொன்ன
வயித்த ரொப்பிக்கிட்டு வந்தா ஏத்துக்கிடுவியா"

எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் திலகபாமாவிடம், 'நிகழ்ச்சி உபயோகமாக இருந்தது, நன்றி' ன்னு சொல்லீட்டு கிளம்பினேன். அந்த வார்த்தைகளில் சம்பிரதாயமும், உண்மையும் சரி பாதி கலந்திருந்தது :)

No comments: